போபால்: 13 வயது சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறி, இஸ்லாமிய இளைஞனை பொதுமக்கள் கடுமையாக தாக்கியதையடுத்து, அந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் ஒரு கொடுமை நடந்துள்ளது.. கடந்த ஞாயிற்றுக்கிழமை, இந்துக்கள் அதிகம் உள்ள பகுதியான கோவந்த் நகரில் இஸ்லாமிய இளைஞரான தஸ்லீம் அலி என்பவர் வளையல் விற்றுக்கொண்டிருந்தார்… அவருக்கு 25 வயதாகிறது..அப்போது, அங்கிருந்த 13 வயது சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறி, அப்போது அங்கு வந்த இந்து அமைப்பினர் சிலர், தஸ்லீமை சுற்றி வளைத்து கடுமையாக தாக்கி உள்ளனர்..
அலறல்
கண்மூடித்தனமாக தாக்கியதில் இளைஞர் வலி பொறுக்க முடியாமல் கதறினார்.. அப்போதும் அந்த கும்பல் அடங்காமல், தஸ்லீமின் உடைமைகளை எல்லாம் சோதனையிட்டது.. மேலும் அவர் வைத்திருந்த வளையல்களை உடைத்து நொறுக்கினர்.. அவர் வைத்திருந்த ரூ.10 ஆயிரத்தையும் அந்த கும்பல் பறித்து கொண்டது..
வீடியோ
இது அத்தனையும் அங்கிருந்தோர் வீடியோவாக எடுத்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டுவிடவும், அது மக்களுக்கு பெருத்த அதிர்ச்சியை உண்டு பண்ணியது.. இதனால், இஸ்லாமிய இளைஞரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்தன.. மேலும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அந்த இஸ்லாமிய இளைஞரின் உறவினர்கள், போலீஸ் ஸ்டேஷன் முன்பு விடிய விடிய போராட்டமும் நடத்தினர்.
விற்பனை
ஆனால், வளையல் விற்பனை செய்தவர் போலியான அடையாள அட்டைகளை வைத்திருந்துள்ளார் என்றும், 13 வயது சிறுமியிடம், நீ அழகாய் இருக்கிறாய் என்று சொல்லி தகாத முறையில் தொட்டதாகவும், அந்த பகுதியினர் புகார் தந்தனர்.
மத்திய அமைச்சர்
இந்த சம்பவம் குறித்து அம்மாநில பாஜக அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா பேசும்போது, “இந்து பெயரை பயன்படுத்தி அவர் வளையல் விற்பனை செய்ததால்தான் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது” என்றார்.. ஏற்கனவே கொந்தளித்து போயிருந்த மக்களுக்கு, மத்திய அமைச்சரின் இந்த பதில் மேலும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
காங்கிரஸ்
எனினும், அக்கம்பக்கத்தினர் அளித்த அடிப்படையில் தஸ்லிம் அலியை போலீசார் கைது செய்தனர்.. இந்த கைது நடவடிக்கைக்கு காங்கிரஸ் தரப்பு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தது.. இந்தூர் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அம்மாநில காங்கிரஸ் சிறுபான்மை நலத்துறை இந்து முஸ்லீம் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கண்டனம் தெரிவித்தது.
கேள்வி
காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் “அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் வர உள்ளதை ஒட்டி, வகுப்புவாத மோதலை தூண்டுவதற்கான முன்னோட்டம் தான் இதுபோன்ற சம்பவங்கள்.. எது சரி எது, தவறு என்று முடிவு செய்ய இவர்கள் யார்? சட்டத்தின் ஆட்சி தான் நடக்கிறதா? இந்த சம்பவத்தை உள்துறை அமைச்சர் நியாயப்படுத்துகிறார் என்றால், அவர் ஏன் அப்பதவியில் உள்ளார்? என்று காட்டமாகவும் கேள்வி எழுப்பி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
பாஜக
பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து வட மாநிலங்களில் இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்தே வருவதாகவும், குறிப்பாக குஜராத், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் தான் இதுபோன்ற சம்பவங்கள் தொடர் கதையாகி வருவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன..!