சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் அப்படியென்ன சாதித்து விட்டார் இந்த 2 மாசத்தில்? இதுதான் அதிமுகவினர் மற்றும் பாஜகவினர் வைக்கும் விமர்சனமாக இருக்கிறது. ஸ்டாலின் அப்படி என்ன செய்து விட்டார்.. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவைவிடவா? எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியைவிடவா.. ஸ்டாலின் ஆட்சி புரிந்துவிட்டார்? என்றும் அதிமுகவினர் கேட்கிறார்கள்.
ஆட்சிக்கு வந்த 2 மாசத்திலேயே, திமுக மக்களை ஏமாற்றிவிட்டது, தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தார் எடப்பாடி பழனிசாமி… மேலும் இதை கண்டித்து நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டமும் நடத்தினார்.
அப்படியானால், முக ஸ்டாலின் முதல்வராவதற்கு முன்பு, அதிமுக ஆட்சியில் குறிப்பாக அரியணை ஏறிய 75 நாட்களில் என்னென்ன சாதனைகளை புரிந்துள்ளது என்ற கேள்வி மக்களுக்கு இயல்பாக வருகிறது. ஒரு வேளை அதிமுக ஆட்சியில் பெரிதாக சாதனை செய்திருப்பார்களோ என்ற ஆர்வமும் எழுகிறது.. அதைத்தான் இப்போது பார்க்கப் போகிறோம்.. ரீவைன்ட் மோடுக்கு வாங்க.
ஜெயலலிதா
2016ல் 2வது முறையாக முதல்வராக பொறுப்பேற்றார் ஜெயலலிதா.. ஆனால், அப்போதே அவர் உடல்நிலை சோர்ந்திருந்தது.. அத்தோடுதான் ஆட்சி செய்தார். தன்னுடைய 100 நாள் ஆட்சியின்போது தான் செய்த சாதனையை விளக்கி ஒரு லிஸ்ட் வெளியிட்டிருந்தார் ஜெயலலிதா… ஆனால், அது மக்களிடம் எடுபடவே இல்லை.. காரணம், ஏராளமான கொள்ளைகளும், கொலைகளும், வன்முறைகளும், அந்த 100 நாட்களில் நடந்திருந்தது… அதுவும் ஒரே நாளில் அன்றைய தினம் 3 பெண்கள் கொல்லப்பட்டனர்..
ட்வீட்
“பெண் ஆட்சி செய்யும் மாநிலத்தில் பெண்களுக்கே பாதுகாப்பில்லை… இதற்கு அதிமுக அரசு தலைகுனிய வேண்டும்” என்று ஒரு தலைவர் ட்வீட் போட்டிருந்தார்.. அவர் வேறு யாருமில்லை.. இன்று அந்த கூட்டணியில் உள்ள டாக்டர் ராமதாஸ்தான்.. 100வது நாள் கொண்டாட்டத்தை கிண்டலடித்திருந்தார்.. “மக்களாட்சியைக் கூட மசாலாப் படத்துக்கு இணையாக மாற்றியது தான் திராவிட சாதனை!” என்றும் பதிவிட்டிருந்தார்.
பூசல்கள்
ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் ஜெ.மரணமடைந்ததும், ஓபிஎஸ் பதவியேற்றார்.. அதற்குள் ஏகப்பட்ட பிரச்சனை, தகராறு, உட்கட்சி பூசல், தர்மயுத்தம் என 2 மாசத்தில் காட்சிகள் மாறின.. காலங்கள் ஓடின.. ஒருவேளை சசிகலா முதல்வராகி விடுவாரோ என்று எல்லாரும் நினைத்த நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானார்.
ஜெ.மரணம்
இவர் பதவி ஏற்ற நேரம்தான் அதிமுகவில் உச்சக்கட்ட பூசல்கள்.. உச்சக்கட்ட தகராறுகள்.. ஒருபக்கம் இவர்களின் சண்டை, மறுபக்கம் ஜெயலலிதா மரண மர்மம் என குழப்பத்துடன் தமிழ்நாடு பயணித்தது.. 500 டாஸ்மாக் கடைகள் மேலும் மூடப்படும், மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்தும் என்று அறிவித்ததைதவிர பெரிதாக அப்போது அவர் அறிவித்ததாக தெரியவில்லை.
ஜெயலலிதா
முக்கால்வாசி நிகழ்ச்சிகளை வீடியோ கான்பரன்ஸ் மூலம்தான் எடப்பாடி துவக்கி வைத்து கொண்டிருந்தார்… இதைவிட முக்கியம், இறந்து போன ஜெயலலிதா, வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம், உட்பட நிறைய வாக்குறுதிகளை அவரும் தந்து சென்றார்.. ஆனால், அவை எடப்பாடி ஆட்சிக்கு வந்து 100 நாள் ஆகியும் செயல்படுத்தவில்லை.
பிரச்சாரங்கள்
சரி இப்போது திமுக ஆட்சிக்கு வருவோம்.. கடந்த 75 நாட்களில் என்ன நடந்தது.. முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்றதும் தேர்தல் பிரசாரத்தின் போது அளித்த வாக்குறுதிகளில், 5 புதிய திட்டங்களுக்கான கோப்புகளில் கையெழுத்திட்டார்… பதவியேற்ற ஒரு மாதத்திற்குள், கொரோனா நிவாரணம் 4 ஆயிரம் ரூபாய், ஆவின் பால் விலை குறைப்பு, கொரோனா பாதிப்பால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 5 லட்சம் வைப்புத் தொகை… ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லா மாநிலம் என பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.
அதிகாரிகள்
பிரசாரத்தின் போது பொதுமக்களிடம் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது 100 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என உறுதியளித்திருந்தார். திமுக ஆட்சிக்கு வந்ததும் “உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம்” என்ற துறையை ஒதுக்கி அதற்கு ஐஏஎஸ் அதிகாரி ஷில்பா பிரபாகரை நியமித்து உத்தரவிட்டார்.
இலவச பயணம்
சாதாரண நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்பது மே 8 முதல் நடைமுறைக்கு வந்தது… அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் கொரோனா நிவாரணமாக வழங்கப்படும் என்று முதல் கையெழுத்திட்ட முதலமைச்சர், மே 16-ம் தேதி முதல் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
சவால்
திமுக ஆட்சிக்கு வந்ததும், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதே மிகப்பெரிய சவாலாக பார்க்கப்பட்ட நிலையில், மிக வேகமாக அதைக் கட்டுப்படுத்தினர். இவ்வளவையும் ஒரே மாதத்தில் செய்து முடித்துள்ளனர். இத்தனைக்கும் அதிமுக அரசு கஜானாவை சுத்தமாக காலி செய்து வைத்துவிட்டு போனதாக, திமுக கூறி வரும் பின்னணியில் நடந்துள்ளது. ஆளுநர் உரையின்போதுகூட, “இது டிரெயிலர்தான்.. மெயின் பிக்சர் இனிமேல்தான்” என்று சொன்னார் ஸ்டாலின்.
பட்ஜெட்
திமுகவின் பட்ஜெட் இன்னும் வெளியாகவில்லை. அதில்தான் திமுகவின் போக்கு எப்படி இருக்கப் போகிறது என்று தெரிய வரும்.. தெளிவும் பிறக்கும். அதேசமயம், அதிமுகவும் ஒரு சாதனையை படைத்திருக்கிறது.. அதாவது ஒரு வருஷத்தில் 3 முதலமைச்சர்கள் மாறியதுதான் அதிமுகவின் அசைக்க முடியாத சாதனை.. இதை அப்போதே பல தலைவர்கள் (இப்போது அதிமுக கூட்டணியில் இருப்பவர்கள்) விமர்சித்திருந்தனர், மக்களிடமும் அது பேசு பொருளாக அமைந்திருந்தது. எனவே, ஜெயலலிதாவின் 100 நாள் ஆட்சியையும், எடபப்டி பழனிசாமியின் 100 நாள் ஆட்சியையும், முக ஸ்டாலினின் 2 மாத ஆட்சியையும், தமிழ்நாட்டு மக்களே கூட்டி கழித்த ஒரு கணக்கு போட்டு கொள்வார்கள்..!