சென்னை: எல்.முருகனின் பயோவில் “கொங்கு” என்று ஏன் குறிப்பிடப்பட்டிருந்தது, அது சரியா? தவறா? இது திமுகவை சீண்டுவதற்காகவே அப்படி குறிப்பிடப்பட்டிருந்ததா என்பது போன்ற விவாதங்கள் சோஷியல் மீடியாவில் எழுந்து வருகின்றன.
மத்திய அமைச்சரவை நேற்று முன்தினம் மாற்றி அமைக்கப்பட்டது.. அப்போது எல்.முருகனும் மத்திய அமைச்சராக பதவி ஏற்றார்.
வழக்கமாக, பதவியேற்புக்கு முன்பு, சம்பந்தப்பட்ட அமைச்சர்களின் பயோ அதாவது சுயவிபர குறிப்பு வெளியாகும்..
பயோ
அந்த வகையில் முருகனுடைய பயோவும் வெளியானது.. அதில், ‘எல்.முருகன், தமிழகத்தின் கொங்கு நாட்டை சேர்ந்தவர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.. இந்த பயோவை முருகனே நேரடியாக தயாரித்திருக்க முடியாது.. எனினும், இது சோஷியல் மீடியாவில் சர்ச்சையையும் கிளப்பி விட்டு வருகிறது. காரணம், இது வேண்டுமென்றே திமுகவை சீண்டுவதற்காக முருகனின் பயோவில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாக ஒரு சாரார் கூறுகிறார்கள்.. இதற்கு திமுக தரப்பில் சொல்லும் காரணம் இதுதான்:
விவாதம்
“நாங்க ஒன்றியம் என்று சொன்னதற்கே பிரச்சனை செய்து கொண்டிருக்கிறார்களே.. இத்தனைக்கும் அரசியலமைப்பு சட்டத்தின்படி, விதிகளுக்குட்பட்டுதான் நாங்கள் ஒன்றியம் என்கிறோம்.. ஆனாலும் இதை பாஜக ஏற்க மறுக்கிறது… அப்படி இருக்கும்போது முருகனின் பயோவில் ஏன் கொங்கு நாடு என்றிருக்கிறது? இவர் ஊர் நாமக்கல்தானே? பிறகு நாமக்கல் என்றுதானே அந்த ஃபார்மில் குறிப்பிட்டிருக்க வேண்டும்? எதற்காக கொங்குநாடு என்றிருக்கிறது? இது திட்டமிட்ட பிரிவினைவாதம்..
பிரிவினைவாதம்
அப்படி என்றால், தமிழ்நாடு என்று சொன்னால் இவர்களுக்கு ஏன் கோபம் வருகிறது? ஒன்றியம் என்று சொன்னால் ஏன் இவர்களால் ஏற்க முடியவில்லை.. இருப்பதை சொல்வதையே ஏற்க மறுக்கிறார்கள்.. இல்லாத ஒரு நாட்டை இவர் சொல்வதை மட்டும் ஏற்க முடியுமா?” என்று கொந்தளிக்கிறார்கள்.
ஈஸ்வரன்
ஆனால், மற்றொரு தரப்போ இதை வேறு விதமாக அணுகுகிறது.. நாங்க திமுகவை ஏன் இதில் சீண்ட வேண்டும்? எங்களுக்கு என்ன அவசியம்? இதே திமுக கூட்டணியில் ஈஸ்வரன் இருக்கிறாரே? அவர் கட்சி பெயர் என்ன? அந்த கொங்கு நாடு எங்கிருந்து வந்தது? அந்த பெயரை திமுகவால் மாற்ற முடியுமா? அல்லது திமுக சொன்னால்தான் ஈஸ்வரன் மாற்றி கொள்வாரா? ஜெய்ஹிந்தை விமர்சித்தவர்மீதுதான் கேள்வி எழுப்புமா? இதையும் திமுக சற்று யோசிக்க வேண்டும் என்கிறார்கள்.
விவாதம்
ஆனால், முருகனின் பயோவில் எதற்காக அப்படி கொங்குநாடு என்று குறிப்பிடப்பட்டிருந்தது என்று உண்மையிலேயே காரணம் தெரியவில்லை.. ஒருவேளை கொங்கு பகுதியை சார்ந்ததால், அந்த ஃபார்மில் குறிப்பிடப்பட்டிருக்கலாம் அல்லது தெரியாமல் இடம்பெற்றிருக்கலாம் என்கிறார்கள். அப்படி இருந்தாலும் கூட சட்டப்படி பார்த்தாலும் இது சரியானது அல்ல என்றே சட்ட வல்லுநர்களும் சொல்கிறார்கள். எதுவானாலும், டெல்லியில் இருந்து முருகனே வந்து இதற்கு விளக்கம் தந்தால்தான் உண்டு.. அதுவரை சோஷியல் மீடியாவில் விவாதங்கள் பரபரத்து கொண்டுதானிருக்கும்..!