டெல்லி: இந்தியாவில் மோசமான பாதிப்பை ஏற்படுத்திய டெல்டா வகை கொரோனா, தற்போது பல தெற்கு ஆசிய நாடுகளுக்கும் பரவ தொடங்கியுள்ளதால், விரைவில் கொரோனா 3ஆம் அலை ஏற்படலாம் என ஆய்வாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் குறைந்திருந்த கொரோனா கடந்த பிப்ரவரி இறுதியிலேயே அதிகரிக்கத் தொடங்கியது. முதலில் மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்கள் மட்டும் அதிகரித்த கேஸ்கள் பின்னர், நாடு முழுவதும் கொரோனா 2ஆம் அலையாக உருவெடுத்தது.
நாட்டில் கொரோனா 2ஆம் அலை ஏற்பட உருமாறிய டெல்டா வகை கொரோனாவே காரணம் கூறப்பட்டது. இந்த வகை கொரோனா அதிவேகமாகப் பரவுவதால் மோசமான பாதிப்புகள் ஏற்படுகின்றன.
ஆசிய பசிபிக் நாடுகள்
இந்நிலையில், இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது. தினசரி பாதிப்பு கடந்த சில நாட்களாகவே 50 ஆயிரம் என்ற அளவிலேயே உள்ளது. அதேநேரம் ஆசிய பசிபிக் பகுதியில் உள்ள மற்ற நாடுகளில் வைரஸ் பாதிப்பு திடீரென அதிகரித்துள்ளது. இது கொரோனா 3ஆம் அலையை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.
ரஷ்யா
ரஷ்யாவில் தினசரி வைரஸ் பாதிப்பு 20 ஆயிரத்தைக் கடந்துள்ளது. அதேபோல உயிரிழப்புகளும் அங்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. அங்கு இதுவரை 50 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக டெல்டா கொரோனா காரணமாகவே அங்கு வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தோனேசியா என்ன நிலை
அதேபோல தீவு நாடான இந்தோனேசியாவிலும் தினசரி பாதிப்பு 21 ஆயிரத்தைக் கடந்துள்ளது. அங்கு 5% குறைவான மக்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் சீனாவின் சினோவாக் வேக்சின் மூலமே தடுப்பூசி பணிகள் நடைபெறுகிறது. ஆனால், அது குறைவான தடுப்பாற்றல் தருவதில்லை என்பதாலும், டெல்டா வகை கொரோனாவாலும் வைரஸ் பாதிப்பு அங்கு அதிகரித்துள்ளது.
சிட்னி மீண்டும் ஊரடங்கு
கொரோனா சிறப்பாகக் கையாண்டதாகக் கருதப்படும் ஆஸ்திரேலியாவிலும் கொரோனா பாதிப்பு சில நாட்களாக அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய நகரமான சிட்னியில் தினசரி கொரோனா கேஸ்கள் 80ஆக உயர்ந்துள்ளது. அங்குச் சர்வதேச விமான குழுவைச் சேர்ந்த ஒருவர் மூலம் வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், வைரஸ் பாதிப்பு அதிகரிக்க டெல்டா கொரோனா வகையே காரணம் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதனால் அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
3ஆம் அலை?
இந்தியாவிலும் டெல்டா கொரோனா மேலும் உருமாற்றமடைந்த டெல்டா பிளஸ் கொரோனாவாக தோன்றியுள்ளது. மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இந்த வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்டா பிளஸ் வைரஸ் நேபாளம், ரஷ்யா உள்ளிட்ட 9 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. டெல்டாவும், டெல்டா பிளஸ் கொரோனாவும் ஆசிய பசிபிக் நாடுகளில் கொரோனா 3ஆம் அலையை ஏற்படுத்தக் கூடும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதனால் வேக்சின் பணிகளையும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.