சென்னை: தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திண்டுக்கல் லியோனி, புத்தகங்களில் மத்திய அரசு என்ற வார்த்தை நீக்கப்பட்டு ஒன்றிய அரசு என அச்சிடப்படும் என்றார்.
தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக திண்டுக்கல் லியோனி நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் இந்த பதவியில் முன்னாள் அமைச்சர் வளர்மதி இருந்தார்.
இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் அந்த பதவிக்கு பட்டிமன்ற பேச்சாளரும் நடுவருமான திண்டுக்கல் ஐ லியோனி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தனது நியமனத்திற்கு நன்றி கூற முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்தார். அப்போது அவரிடம் வாழ்த்து பெற்றார்.
கல்வியியல்
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் : தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழக தலைவராக வாய்ப்பளித்துள்ள முதல்வருக்கு நன்றி. எளிய மக்கள் கல்வியை சுமையாக கருதாமல் சாதாரண குழந்தைகள் விருப்பத்துடன் பாடங்களை படிக்க வேண்டும்.
தயார்
இதில் பல புதுமைகளை படைக்க தயாராக இருக்கிறேன். ஒன்றிய அரசு எனும் வார்த்தையை மக்கள் சிறப்பாக பயன்படுத்த துவங்கி விட்டனர். அடுத்து பருவ புத்தகங்கள் அச்சிடும் போதும் மத்திய அரசு என்ற சொல் நீக்கப்பட்டு ஒன்றிய அரசு என்று புத்தகங்களில் அச்சிடப்படும்.
ஒரு வாரம்
33 ஆண்டுகள் ஆசிரியர் பணியில் இருந்த எனக்கு முதல்வர் இந்த வாய்ப்பை அளித்துள்ளார். ஒருவாரத்துக்குள் பொறுப்பேற்றுக் கொள்வேன் என்றார் லியோனி. ஒன்றிய அரசு என கூறுவதை பாஜகவினர் கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் பிரச்சாரம்
அதிமுக தேர்தல் பிரச்சாரத்தில் வாஷிங் மெஷினை இலவசமாக கொடுப்போம் என சொன்னதற்கு திண்டுக்கல் லியோனி பெண்களை இழிவாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அவருக்கு பதவி கொடுத்ததற்கு கண்டனங்கள் எழுந்துள்ளன.