சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா அதிகமாக பரவுவதற்கு யார் காரணம் என்பது பற்றி சட்டசபையில் இன்று காரசார விவாதம் நடைபெற்றது.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் துரைமுருகன் மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோர் இடையே இதுதொடர்பாக கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
எடப்பாடி பழனிச்சாமி பேச்சு
எடப்பாடி பழனிசாமி: எங்களது ஆட்சி காலத்தில் கொரோனா நோய் பரவல் குறைவாக இருந்தது. தொற்று எப்படி பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது தெரியாமல் கூட அதிமுக அரசு அதை சிறப்பாக கையாண்டது. மருத்துவர்கள் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு அவற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அதிமுக ஆட்சியில் கொரோனாவை கட்டுப்படுத்த அனைத்து மருந்துகளும் கையிருப்பில் இருந்தன. அதிமுக ஆட்சியில் இந்தியாவிலேயே அதிகமாக தமிழ்நாட்டில் தான் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது.
ஆக்சிஜன் இருந்தது
அதிமுக ஆட்சி காலத்தில் 9 லட்சத்து 50 ஆயிரம் காய்ச்சல் முகாம்கள் மேற்கொள்ளப்பட்டது. சுமார் 5 கோடி மக்கள் இதனால் பலன் அடைந்தனர். அனைத்து மாவட்டங்களுக்கும் நேரடியாக சென்று கொரோனா சிகிச்சை முறைகளை கேட்டறிந்து நானே ஆலோசனைகளை வழங்கினேன். அதிமுக ஆட்சியில் போதிய படுக்கை வசதிகளும் , ஆக்சிஜனும் கையிருப்பில் வைக்கப்பட்டன.
பரிசோதனைகள்
இப்போது அதிகரித்துள்ள நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்கு பரிசோதனைகள், அதிகப்படுத்தப்பட வேண்டும். தினமும் 3 லட்சம் அளவுக்கு மாதிரிகளை பரிசோதனை செய்ய வேண்டும். அப்போதுதான் நோய் பரவலை குறைக்க முடியும்.
அமைச்சர் மா.சு. பதில்
சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்: கொரோனாவை தடுக்க முக கவசம் அணிய வேண்டாம், சானிடைசர் பயன்படுத்த வேண்டாம் என்று முதல்வராக இருந்தபோது சட்டசபையில் தெரிவித்தது எடப்பாடி பழனிசாமி என்பதை நான் நினைவு படுத்த விரும்புகிறேன்.
அப்போதே செய்திருக்கலாம்
அமைச்சர் துரைமுருகன்: அன்றைக்கே, சட்டசபை உறுப்பினர்களுக்கு முகக் கவசம் போட வைத்திருக்கலாம். அதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று நான் வலியுறுத்தியிருந்தேன். ஆனால் யாருக்கும் எதுவும் ஆகாது என்று அப்போது சொன்னது எடப்பாடி பழனிசாமிதான். உங்களை நாங்கள் காப்பாற்றுவோம் என்று எடப்பாடி கூறினார். ஆனால் எங்களை நாங்கள் தான் காப்பாற்றிக் கொண்டோம். ஆனால் திமுக எம்எல்ஏ அன்பழகனை இழந்துவிட்டோம்.
அம்மா கிளினிக்குகள்
மா.சுப்பிரமணியன்: கடந்த ஆட்சி காலத்தில் சிறிய கழிவறையை கூட மாற்றி அம்மா கிளினிக்குகள் என்று மாற்றியுள்ளார்கள். அதற்கான ஆதாரம் உள்ளது. இவ்வாறு சட்டசபையில் காரசாரமாக விவாதம் நடைபெற்றது.