சென்னை: தமிழகத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதுமுள்ள சுமார் 2.15 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ளவர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று கடந்த நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது. பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள்தூள், துணிப்பை உள்பட மொத்தம் 21 பொருட்கள் ஜனவரி 3ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ஒவ்வோர் அட்டைக்கும் ரூ.505 மதிப்புள்ள பொருட்கள் வழங்கப்படவுள்ள நிலையில், இத்திட்டத்துக்காகத் தமிழக அரசு ரூ.1,088 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இந்த நிலையில் ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன்களை வழங்கினர். பொங்கல் பரிசு பொருள்கள் நேற்றே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் வழங்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று தலைமைச் செயலகத்தில் இந்தத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார்.