சென்னை: கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ந்த பலரும் திமுக உள்ளிட்ட பிற கட்சிகளில் சேர்வது ஸ்ரீபிரியா கோபத்தை கிளறி உள்ளது.அதிலும் நேற்று ஒரே நாள் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் கடந்த சட்டசபை தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய மகேந்திரன் மற்றும் பத்மபிரியா ஆகிய இருவரும் திமுகவில் இணைந்து இருப்பது கமல்ஹாசன் கட்சியினரை கடுகடுக்க வைத்துள்ளது.
சட்டசபை தேர்தல் தோல்விக்கு பிறகு பெரும்பாலான முக்கியமான நிர்வாகிகள் கமல்ஹாசன் கட்சியில் இருந்து விலகி வேறு கட்சிகளில் இணைந்து வருகிறார்கள்.
பிரபலங்கள் இவர்கள்தான்
இப்போது கமல்ஹாசன் கட்சியில் வெகு பிரபலமான முகம் என்றால் சினேகன், பழ.கருப்பையா மற்றும் ஸ்ரீபிரியா ஆகிய மூவரும்தான். இதில், சினேகன் மற்றும் ஸ்ரீபிரியா ஆகிய இருவருமே திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள் என்பது ஒரு ஒற்றுமை. எனவே நீண்ட காலமாக அவர்களுக்கு கமல்ஹாசனுடன் நட்புறவு இருந்துவந்தது. இப்போது இந்த இக்கட்டான நிலைமையையும் அவர்கள்தான் கமல்ஹாசனுக்கு தோளோடு தோள் நின்று பக்கபலமாக இருக்கிறார்கள்.
ஸ்ரீபிரியா விமர்சனம்
மகேந்திரன் மற்றும் பத்மபிரியா ஆகியோர் நேற்று திமுகவில் இணைந்த நிலையில் ஸ்ரீபிரியா, தனது ட்விட்டர் பக்கத்தில் காட்டமாக ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டு இருக்கிறார். அதில், சட்டையை மாற்றுவது போல் கொள்கைகளை மாற்றிக்கொள்ளும் சில அரசியல்காரியவாதிகள் (எதற்கும் எல்லா கட்சி சின்னத்துடன் சட்டைகளை தயாராக வைத்துக்கொள்ளுங்கள்…மாற்ற வசதியாக இருக்கும்) இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இந்த பதிவுக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் போட்டு உள்ளார்கள்.
நெட்டிசன்கள் கேள்வி
இதை பார்த்த சில நெட்டிசன்கள் பழ கருப்பையா உங்கள் கட்சிக்கு வரும்போது மட்டும் நன்றாக இருந்தது இப்போது உங்கள் கட்சியில் இருந்து பிற கட்சிகளுக்கு போகும்போது மட்டும் விமர்சனம் செய்கிறீர்களா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
சோஷியல் மீடியா கட்சி
அதற்கு மக்கள் நீதி மய்யம் ஆதரவாளர்கள் சிலர், அவர் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் வெறுத்து ஒதுக்கி இருந்தார். வேறு கட்சியில் இருந்து அவரை கமல்ஹாசன் அழைத்து வரவில்லை என்று பதிலடி கொடுப்பதை, பார்க்கமுடிந்தது. எது எப்படியோ.. கமல்ஹாசன் கட்சி சமூக வலைத்தளங்களில் மட்டும் தொடர்ந்து இருந்து வருகிறது என்பதுதான் உண்மை.