சென்னை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றி பெற்றதை தொடர்ந்து, அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் தொண்டர்களை சந்தித்து, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மகத்தான வெற்றிக்கு பிறகு தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்களை சந்தித்தார். அறிவாலயம் வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், மேளதாளம் முழங்கியும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பேட்டியளித்ததாவது :- நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மகத்தான வெற்றி பெற்றுள்ளது. தமிழ்நாடு மக்களுக்கு இந்த வெற்றியை அர்ப்பணிக்கிறேன். இந்த வெற்றியை கண்டு நான் கர்வம் கொள்ளவில்லை. மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் தான் வந்துள்ளது.
இந்த வெற்றிக்கு காரணம் திமுகவுடன் உள்ள மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தான். எத்தனையோ சாதனைகளை செய்து கொண்டு இருக்கிறோம். இன்னும் செய்ய இருக்கிறோம். பெண்களுக்கு அதிக அதிகாரம் வழங்குவதுதான் நமது கழகத்தின் லட்சியம். இந்த வெற்றியை ஆடம்பரமாக கொண்டாடாமல், அமைதியாக கொண்டாட வேண்டும். மக்களுக்காக நீங்கள் பாடுபட வேண்டும். ஏதாவது தவறு செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுப்பேன். சட்டமன்ற தேர்தல் பொறுத்தவரை வெற்றி பெற்ற பின்னர் உறுதி எடுத்து கொண்டோம்.
எங்களுக்கு வாக்களித்த மக்கள் மகிழ்ச்சி அடைய வேண்டும். வாக்களிக்காத மக்கள் இவர்களுக்கு வாக்களிக்கவில்லை என்று வருத்தப்படும் படி பணி இருக்க வேண்டும். அதிமுகவின் கோட்டையாக இருந்த கொங்கு மண்டலத்தை நாம் கைப்பற்றியுள்ளோம், எனக் கூறினார்.
இதில், கழக பொது செயலாளர் துரைமுருகன், துணை பொது செயலாளர் ஆ.ராசா, அமைச்சர்கள் சேகர்பாபு, ராஜகண்ணப்பன், கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், கழக தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா, மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த.வேலு ஆகியோர் இருந்தனர்.
இதைத் தொடர்ந்து, மெரினாவில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.