சென்னை: எண்ணூர் அனல் மின் நிலைய கழிவுகளை கொட்டும் விவகாரத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி உரிய நடவடிக்கை எடுப்பார் என தாம் நம்புவதாக கூறியிருக்கிறார் கனிமொழி எம்.பி.எண்ணூர் அனல் மின் நிலையத்தின் சாம்பல் கழிவுகள் எண்ணூர் கழிமுகத்தில் கொட்டப்படுவதால் நீர் நிலைகள் தேங்குவதோடு மாசு ஏற்படுவதாக புகார் இருந்து வருகிறது.
இதனிடையே இந்தப் பிரச்சனை நீண்ட காலமாக இருந்து வரும் சூழலில், இப்போது அமைந்துள்ள திமுக ஆட்சியிலாவது தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கின்றனர் எண்ணூர்-காட்டுக்குப்பம் மீனவ கிராம மக்கள்.இதனிடையே நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கு மத்தியில் இரண்டு நாள் பயணமாக சென்னை வந்த கனிமொழி எம்.பியை எண்ணூர்-காட்டுக்குப்பம் மீனவ கிராமமக்கள் நேற்று சந்தித்து பேசினர். அவர்களது பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து அறிந்துகொண்ட கனிமொழி, எண்ணூர் அனல் மின் நிலைய கழிவுகள் விவகாரத்தில் திமுக அரசு நிச்சயம் தீர்வு தரும் என நம்பிக்கை அளித்தார்.
பின்னர் இது தொடர்பாக தனது டிவிட்டரில் பதிவு வெளியிட்டுள்ள அவர், ”எண்ணூர் அனல்மின் நிலையம் நிலக்கரி சாம்பலையும் மணலையும் எண்ணூர் கழிமுகத்தில் கொட்டுவதால், நீர் நிலைகளில் ஏற்பட்ட மாசு, கிராம மக்களின் வாழ்வாதார பாதிப்பு மற்றும், கிராம இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இன்மை ஆகியவற்றை விளக்கி சொன்னார்கள்.”
”அதிமுக அரசு இந்த மக்களின் போராட்டங்கள் கோரிக்கைகள் எதையும் கண்டுகொள்ளவில்லை. நேற்று இந்த இடத்தை பார்வையிட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் இவர்களின் வாழ்வாதாரத்தை, ஆற்றை, அலையாற்றி காடுகளை காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.