தேனி: அதிமுகவை யாராலும் கைப்பற்ற முடியாது என்றும் தனிப்பட்ட குடும்பமோ, கட்சியோ அதிமுகவை வழிநடத்த முடியாது என்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். கடந்த நான்கரை ஆண்டு காலமாக அதிமுகவை இருவரும் சிறப்பாக வழி நடத்தி வருவதாக கூறி அதிமுகவை கைப்பற்ற நினைக்கும் சசிகலாவிற்கு செக் வைத்துள்ளார் ஓபிஎஸ்.
திமுகவை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அஇஅதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு வருகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்து முதல்முறையாக அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த மே 7ஆம் தேதி தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்று கொண்டார். ஸ்டாலின் பதவியேற்று 3 மாதங்கள் ஆன நிலையில் நீட் தேர்வு ரத்து, பெட்ரோல் விலை குறைப்பு என திமுக அரசு தேர்தல் வாக்குறுதியாக அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டதாக அதிமுக குற்றம்சாட்டி வருகிறது. இதன் காரணமாக அதிமுக போராட்டம் நடத்தி வருகிறது.

ஓபிஎஸ் முழக்கம்
திமுக அரசை கண்டித்து தேனி மாவட்டம் போடியில் தனது இல்லம் முன்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆர்ப்பாட்டம் நடத்தினார். சொன்னது என்னாச்சு என்று முழக்கமிட்டு திமுக அரசுக்கு எதிராக பல்வேறு கேள்விகளை முன்வைத்தார்.

அதிமுக ஆட்சியில் அபாரம்
செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசி திமுக ஆட்சிக்கு வந்துவிட்டதாக குற்றஞ்சாட்டினார். சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் திமுக அரசு தடுமாறி வருவதாக கூறியுள்ளார் ஓ.பன்னீர் செல்வம்.

ஆடியோ ரிலீஸ்
அப்போது அவரிடம், ஆடியோ வெளியிட்டுவரும் சசிகலா அதிமுகவை கைப்பற்ற முயற்சி செய்கிறாரா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஓபிஎஸ், “அதிமுகவை யாரும் கைப்பற்ற முடியாது தனிப்பட்ட நபரோ குடும்பமா கட்சியை வழிநடத்த முடியாது என்று பதிலளித்தார்.

யாராலும் கைப்பற்ற முடியாது
தனி நபரோ, ஒரு குடும்பமோ ஆதிக்கம் செலுத்த முடியாத நிலை அதிமுகவில் உள்ளது. ஜனநாயக முறைப்படி கட்சி நடக்கிறது. என்ன முயற்சி எடுத்தாலும், யாராலும் அதிமுகவை கைப்பற்ற முடியாது. தற்போதைய நிலை தொடரும் என்று கூறினார் நான்கரை ஆண்டுகளாக நாங்கள் இருவரும் அதிமுகவை வழி நடத்தி வருகிறோம் என்றும் தெரிவித்தார்.

பாஜக முடிவு
மத்திய அமைச்சர் பதவி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், அதற்கு அவர் உங்களின் கனவுக்கு பதிலளிக்க முடியாது என்று கூறினார். மகன் ரவீந்திரநாத்திற்கு மத்திய அமைச்சர் பதவியை எதிர்பார்க்கவில்லை என்றும் பாஜக தான் முடிவு எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

சசிகலாவிற்கு செக்
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவை கைப்பற்றும் முடிவில் இருக்கிறார் சசிகலா. இதே நோக்கத்தோடு அதிமுகவினர் பலரிடம் பேசி அதனை பதிவு செய்து ஆடியோவாக வெளியிட்டு வருகிறார். இந்த ஆடியோ அரசியல் பற்றி எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட பலரும் கருத்து கூறிய நிலையில் ஓபிஎஸ் மவுனத்தை பதிலளித்து வந்தார். இந்த நிலையில் இன்றைய தினம் சசிகலாவின் ஆடியோ அரசியலுக்கு செக் வைக்கும் வகையில் பதில் கூறி மவுனம் கலைத்துள்ளார்.