சென்னை: முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை தமிழக பாஜகவில் இணைந்த போது, பாஜக துணை தலைவராக நியமிக்கப்பட்டார். இப்போது எல் முருகன் மத்திய அமைச்சரானதால் இப்போது பாஜக மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இனி அண்ணாமலையின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த எல். முருகன் புதன்கிழமை மத்திய இணை அமைச்சராக பதவியேற்றார். அவருக்கு மீன் வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் பண்ணை, தகவல் ஒலிபரப்புத்துறை ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில், முருகன் வகித்து வந்த பதவிக்கு அண்ணாமலையை நியமித்திருக்கிறது பாஜக மேலிடம்
அண்ணாமலை பாஜக மாநில தலைவரான உடன் சொன்ன ஒரு விஷயம் மிக முக்கியமானது. அதாவது பாஜகவின் சிந்தாந்த்தை ஒவ்வொரு வீடாக கொண்டு சேர்ப்பதே எனது முதல் பணி என்று கூறியுள்ளார். இதுவே ஒரு கட்சியை பலப்படுத்த தேவையான முதல் விதி. எனினும் இதை ஒவ்வொரு செயல்படுத்துவது என்பது எளிதானது அல்ல. மிகவும் சவாலானது.
பாஜக வளர்ச்சி
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக கூட்டணி 2014ல் ஆட்சி பொறுப்புக்கு வந்த பின்னரே பாஜக ஒவ்வொரு மாநிலமாக வளர ஆரம்பித்தது. பல மாநிலங்களால் ஆட்சியைபிடிக்க முடிந்த பாஜகவால் தமிழ்நாட்டில் நோட்டாவை தாண்ட முடியாத நிலையே இருந்தது. தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்திராஜன், நாகரீகமான முறையில் விமர்சனங்களுக்கு பதில் அடி கொடுப்பது. திராவிட கட்சிகளுடன் மிகவும் வெறுப்பு காட்டாமல் பாஜகவினை வளர்த்து வந்தார். அவரது அரசியல் அணுகுமுறை பலரும் பாராட்டினார்கள். மெல்ல மெல்ல பாஜக வளர தொடங்கியது. தமிழிசை காலத்தில் இருந்து தான் தமிழகத்தில் பாஜக புது வேகத்தில் பயணிக்க ஆரம்பித்தது.
அதிரடி அரசியல்
இப்படியான சூழலில் தான் பாஜக தலைவராக எல் முருகன் நியமிக்கப்பட்டார். ஏராளமான திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பல்வேறு முக்கிய பிரமுகர்களை கட்சியில் சேர்த்தார். திமுகவை கடுமையாக விமர்சித்தார். எல் முருகன் வேல் எடுத்துக்கொண்டு கோயில் கோயிலாக சென்று கவர்ந்தார். கூட்டணி கட்சியான அதிமுகவையும் அதிக இடங்கள் கேட்டு நிர்பந்தம் செய்தார். அதன் பயணமாகவே இன்று 4 எம்எல்ஏக்களை பாஜக பெற்றுள்ளது. பல்வேறு தொகுதிகளில் கணிசமான வாக்கு வங்கிகளும் உருவாகி உள்ளது. எல் முருகனின் அதிரடி அரசியல் மற்றும் வேகமாக தாக்குதல்கள் திராவிட கட்சிகளை அவ்வப்போது அதிர்ச்சி அடையவைத்தது
எப்படி இருக்கும் யுக்தி
இந்நிலையில் எல்முருகன் அமைச்சராகிவிட்டதால் அண்ணாமலை தலைவராகி உள்ளார். எல் முருகன் பாணியிலேயே இவர் பயணிப்பாரா அல்லது புதிய பாணியை கையில் எடுப்பாரா என்பது தெரியவில்லை. மத்தியில் ஆட்சியில் உள்ள கட்சியின் மாநில தலைவர் என்பதால் அண்ணாமலையின் ஒவ்வொரு அரசியல் நகர்வும் மத்திய அரசின் திட்டங்களை கொண்டு சேர்த்து பாஜகவிற்கு மக்களிடம் நல்ல பெயரை உருவாக்க வேண்டும் என்பதிலேயே இருக்க வாய்ப்பு உள்ளது.
அதிமுக திமுகவின் பலம்
அதேநேரம் தமிழகத்திற்கு தேவையான நிதிகளை மத்திய அரசிடம் இருந்து வாங்குவதற்கு ஒத்துழைப்பது, தமிழகத்திற்கு புதிய திட்டங்களை கொண்டுவர வைப்பது போன்றவற்றை அண்ணாமலை செய்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றியவர் என்பதால், கட்சியன் அடிப்படை கட்டமைப்பை ஒவ்வொரு ஊரிலும் வலுப்படுத்த அதிகம் முயற்சிப்பார் என கூறப்படுகிறது. அப்படி செய்தால் மட்டுமே திமுக அதிமுகவை வீழத்த பாஜகாவால் முடியும். ஒவ்வொரு வார்டு வாரியாகவும் அடிப்படை கட்டமைப்பு பாஜகவிற்கு உருவாக்க வேண்டிய பொறுப்பு அண்ணாமலைக்கு உள்ளது. இதுதான் திமுக அதிமுகவின் பலம் ஆகும்.
நீட், கல்வி கொள்கை
பாஜக தமிழகத்தில் சிக்கலை சந்திக்க முக்கிய காரணமாக இருப்பதற்கு முக்கிய காரணம் நீட், இந்தித் திணிப்பு, புதிய கல்விக் கொள்கை போன்றவை தான். சிறுபான்மையினர் தவிர்த்து பா.ஜ.கவுக்கு எதிரான புதிய வாக்கு வங்கியை உருவாக்கியிருக்கிறது இந்த பிரச்சனைகள். அண்ணாமலைக்கு முன்பாக பெரிய சவால் மேலே சொன்னவை தான். அவர் இந்துத்துவ அரசியலை கையில் எடுக்கலாம் என்றாலும் கையோடு தமிழகத்திற்கு ஆதரவான கொள்கைகளை வகுக்கும்படி மத்திய அரசை வலியுறுத்தினால் பா.ஜ.கவை வளர்க்கலாம்.
மத்திய அரசின் திட்டங்கள்
ஏனெனில் தமிழர்களின் நம்பிக்கை, தமிழர்களின் கலாச்சாரம், மாநில உரிமை, மக்களின் அடிப்படை உரிமை இவற்றை பாதுகாப்பதில் தமிழர்கள் உறுதியாக இருக்கிறார்கள். எனவே இந்த விஷயத்தில் தமிழர்களின் எண்ணங்களை பிரதிபலிப்பதாக மாற்றினாலே பாஜக இங்கு பாதி கிணறை தாண்டிவிடும். இதேபோல் மத்திய அரசு குறித்த விமர்சனங்களை ஆரோக்கியமான முறையில் அணுகி, உடனுக்குடன் பதிலடி கொடுக்க வேண்டும். இதை அண்ணாமலை செய்வார் என்று நம்பலாம். அதிரடி அரசியல் , ஆரோக்கியமாக விமர்சனங்களை எதிர்கொள்வது, புள்ளி விவரத்துடன் பதிலடி கொடுப்பது போன்றவற்றை அண்ணாமலை ஐபிஎஸ் செய்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
அண்ணாமலை பேட்டி
அண்மையில் பிரபல தமிழ் ஊடகத்திற்கு அண்ணாமலை அளித்த பேட்டி இது “நான் வலதுசாரியோ, இடதுசாரியோ கிடையாது. எது சரியோ அந்த பாதையில் செல்ல விரும்புகிறேன். இப்போது நான் வேர்களில் வேலை செய்கிறேன். அடிமட்டத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வர விரும்புகிறேன். அரசியல் ஆகட்டும், சமூகம் ஆகட்டும் இப்போது தமிழகத்திற்கு ஒரு புதிய பார்வை தேவை. மக்களுக்கு ஒரு மாற்றம் தேவை. ஆனால், அவர்களால் ஒரு மாற்றத்தைக் கண்டறியமுடியவில்லை. அடிமட்டத்தில் வேலை செய்யாமல் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரமுடியாது. வேர்களில் வேலை செய்ய அறிவார்ந்த இளைஞர்கள் தேவை. அதைத்தான் நான் செய்து கொண்டிருக்கிறேன்,” என்று கூறியுள்ளார்.