Phone/WhatsApp : +91 72000 33317

Reg.No. TN-02-0040998

ரயில் நிலைய கொள்ளை வழக்கில் திடீர் திருப்பம்: நாடகமாடிய ஊழியர் டிக்காராம் கைது…

Chennai-Theft-Case-Aquest-Arrest--1024x571

சென்னை: திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலைய கவுன்டரில் இருந்து ரூ.1.32 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்துவிட்டு நாடகமாடிய ஊழியர் டிக்காராம் மற்றும் அவரது மனைவியை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை திருவான்மியூர் ரெயில் நிலையத்தில் நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் பயணிகள் சிலர் டிக்கெட் எடுப்பதற்காக தரை தளத்தில் உள்ள டிக்கெட் கவுண்ட்டரில் வரிசையில் காத்திருந்தனர். தினசரி அதிகாலை 4 மணிக்கே திறக்கப்படும் டிக்கெட் கவுண்ட்டர் நேற்று திறக்கப்படாமல் கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருந்ததால் சந்தேகம் அடைந்த பயணிகள், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரெயில்வே போலீசாரிடம் இதுபற்றி கேட்டனர். உடனே அங்கு வந்த ரயில்வே போலீசார், வெளியே பூட்டப்பட்டிருந்த கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, டிக்கெட் கவுண்ட்டர் உள்ளே ஊழியர் ஒருவர், அங்கிருந்த ஜன்னலில் கை, கால்களை பின்னால் கட்டப்பட்டு, வாயில் துணி வைத்து திணிக்கப்பட்ட நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரது வாயில் இருந்த துணியை எடுத்து விட்டு கை, கால் கட்டுகளை அவிழ்த்த ரயில்வே போலீசார், இதுபற்றி அவரிடம் விசாரித்தனர்.

விசாரணையில் தன்னை முகமூடி அணிந்த 3 மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் மிரட்டி கட்டிப்போட்டு விட்டு டிக்கெட் விற்பனை செய்து வைத்திருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றதாக கூறினார். இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு ரெயில்வே போலீசார் தகவல் தெரிவித்தனர். ரயில்வே டி.ஐ.ஜி. ஜெயகவுரி, சென்னை மண்டல எஸ்.பி. அதிவீரபாண்டியன், சென்னை ரெயில்வே கோட்ட பாதுகாப்புப்படை கமிஷனர் செந்தில்குமரேசன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். சம்பவம் நடந்த இடம், ரயில் நிலைய நடைமேடைகளை ஆய்வு செய்த போலீஸ் அதிகாரிகள், ரெயில்வே ஊழியரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், ‘தனது பெயர் டிக்காராம் என்றும், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் என்றும், கடந்த 4 ஆண்டுகளாக தெற்கு ரயில்வேயில் டிக்கெட் கவுண்ட்டரில் டிக்கெட் வினியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு மோப்பநாய் வரவழைத்து சோதனை மேற்கொண்ட திருவான்மியூர் ரயில்வே போலீசார், இதுபற்றி 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், சம்பவ இடத்தில் சிசிடிவி கேமரா ஏதும் இல்லாததால் கொள்ளையர்களை அடையாளம் காண்பதில் சிறிது சிக்கலும் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில்,இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக,பறக்கும் ரயில் நிலைய டிக்கெட் கவுண்டரில் இருந்து ரூ.1.32 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்து விட்டு நாடகமாடிய ஊழியர் டீக்காரம் கைது செய்யப்பட்டுள்ளார்.சம்பவ இடத்தில் சிசிடிவி கேமரா ஏதும் இல்லாததால் ரயில் நிலையத்தின் அருகில் உள்ள சிசிடிவி கேமராவை போலீசார் ஆய்வு செய்த போது,கொள்ளை நடைபெற்ற குறிப்பிட்ட நேரத்திற்குள் பெண் ஒருவர் வந்து செல்ல கூடிய காட்சி இடம் பெற்றது. இதனைத் தொடர்ந்து,சந்தேகத்தின் பேரில் அந்த பெண் யார் என்று போலீசார் விசாரணை மேற்கொண்டார்கள்.

அப்போது,அவர் டிக்கெட் கவுன்டர் ஊழியர் டிக்காராம்மனைவி மீனா என்பது தெரிய வந்தது. உடனே அவரது வீட்டிற்கு சென்று அவரது மனைவியை பிடித்து போலீசார் விசாரிக்கும்போது தான்,தனது மனைவியுடன் சேர்ந்து டிக்கெட் கவுண்டர் ஊழியர் டிக்காராம் கொள்ளை நாடகம் ஆடியது போலீசார் விசாரணையில் அம்பலமாகியது. இதன்காரணமாக, கொள்ளையடித்துவிட்டு நாடகமாடிய ஊழியர் டிக்காராம் மற்றும் அவரது மனைவியை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர். மேலும்,கொள்ளைப்போன ரூ.1.32 லட்சம் ரொக்கத்தை அவர்களிடமிருந்து போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து,இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.குறிப்பாக,இந்த கொள்ளை சம்பவத்தில் வேறு யாரேனும் அவர்களுடன் தொடர்பில் உள்ளார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Share on facebook
Facebook
Share on google
Google+
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on whatsapp
WhatsApp