கீவ் : உக்ரைனில் போர் நடந்து வரும் நிலையில் தாக்குதலுக்கு அஞ்சி பதுங்கி குழியில் பதுங்கியிருந்த 23 வயது பெண் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் கல் நெஞ்சையும் கரைய வைத்துள்ளது.
உக்ரைனில் ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. 3வது நாளாக ரஷ்ய படை வீரர்கள் உக்ரைனை 3 திசைகளிலும் சுற்றி வளைத்து தலைநகர் கீவ் நகரை குறி வைத்து தாக்குதல்களை தொடர்ந்து வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து பாதுகாப்புக்காக மக்கள் கீவ் நகரில் உள்ள மெட்ரோ சுரங்கப்பாதைகளில் தஞ்சமடைந்துள்ளனர். இந்நிலையில் கீவ் மெட்ரோ சுரங்க பதுங்கு அறையில் தஞ்சமடைந்த 23 வயது பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.
உடனடியாக பெண்ணுக்கு தேவையான உதவிகளை செய்த காவல்துறையினர், தாய் – சேய்க்கு மருத்துவ உதவிகளை செய்து வருகின்றனர். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று பாதுகாப்பாக தங்க வைத்துள்ளனர்.
போர்க்களத்தின் நடுவே குழந்தை பிறந்த சம்பவம் கல் நெஞ்சையும் கரைய வைத்துள்ளது. மேலும் இந்த குழந்தைதான் எங்களுக்கு சுதந்திரம் ஈட்டி தர உள்ளதாக கூறி அந்நாட்டினர் குழந்தையை சுதந்திரம் என அழைத்து வருகின்றனர்.