Phone/WhatsApp : +91 72000 33317

Reg.No. TN-02-0040998

பிற மதத்தை மதிக்கிறோம்.. “ஆனால்..” இந்தியாவில் ஒவ்வொரு மதத்தினரின் மனநிலை என்ன? சுவாரசிய சர்வே

religious-freedom-08-1510118820-1625034026

டெல்லி: பெரும்பாலான இந்தியர்கள்.. அவர்கள் எந்த மதத்தை பின்பற்றுபவர்களாக இருந்தாலும் சரி.. பிறரது மத சுதந்திரத்தை மதிக்கிறார்கள், அதே நேரம், பிற மதத்தினரோடு இணைந்து நெருங்கி வாழ விரும்பவில்லை என்று, வாஷிங்டனைச் சேர்ந்த லாப நோக்கமற்ற அமைப்பான, Pew Research Center நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வு இந்தியர்களின் மதம் சார்ந்த பல சுவாரசியமான நம்பிக்கைகளை உலகிற்கு காட்டுவதாக அமைந்துள்ளது.

பெரும்பாலான இந்தியர்கள், இந்தியாவில், மத சுதந்திரத்தை அனுபவிப்பதாக உணர்கிறார்கள் என்பது இந்த சர்வே வெளியிட்ட மிக முக்கிய தகவலாக உள்ளது. பெரும்பாலான இந்தியர்கள், மத சகிப்புத்தன்மையை மதிக்கிறார்கள், எல்லா மதங்களுக்கும் மரியாதை செலுத்துவது இந்தியர்களின் கடமை என நினைக்கிறார்கள்.

தனித்தனியாக வாழ விருப்பம்

என்னதான் அனைத்து மதங்களையும் மதித்தாலும், ஒவ்வொரு மதத்தினரும், “தனித்தனியாக வாழ விரும்புகிறார்கள்” என்பது இந்த சர்வேயின் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம். ஆம்.. திருமணம் உள்ளிட்ட விவகாரங்களில் தங்கள் மதத்தைச் சேர்ந்தவர்களுக்குள்தான், உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று அனைத்து மதத்திலும் பெரும்பாலானோர் விரும்புகிறார்கள் என்கிறது இந்த சர்வே.

மத சுதந்திரம் எப்படி உள்ளது

91% இந்துக்கள் தங்களுக்கு இந்தியாவில் மத சுதந்திரம் இருப்பதாக கூறியுள்ளார்கள். 85% இந்துக்கள் அனைத்து மதங்களையும் மதிப்பது மிகவும் முக்கியமானது என்று கூறியுள்ளனர். அதுதான் ‘உண்மையான இந்தியராக’ வாழ்வதற்கு அடிப்படை என்று கூறியுள்ளனர். 80% இந்துக்கள், மற்ற மதங்களை மதித்தல் என்பது இந்து மதத்தின் அடிப்படை என்று கூறியுள்ளனர்.

மத சகிப்புத்தன்மை

மத சகிப்புத்தன்மை குறித்த கேள்விக்கு, 78% முஸ்லிம்கள் பிற மதங்களை மதிப்பது இந்தியராக இருப்பதற்கான ஒரு முக்கிய அடிப்படை என்று தெரிவித்துள்ளனர். 79% முஸ்லிம்கள், பிற மதங்களை மதிப்பது தங்களின் மதத்தின் ஒரு அடையாளம் என்று கூறியுள்ளனர்.

மூன்று மதங்களும் நம்பும் ஒரே விஷயம்

இன்னும் சில விஷயங்களில், இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் இடையே இந்தியாவில் ஒற்றுமை இருப்பதை ஒரு சுவாரசிய விஷயமாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. உதாரணமாக, 77% இந்துக்கள் கர்மாவை நம்புவதாகக் கூறுகிறார்கள். அதே அளவுக்கு முஸ்லிம்களும் அவ்வாறு நம்புவதாக கூறியுள்ளனர். மேலும், 81 சதவீதம் இந்துக்கள் கங்கை நதி தங்கள் பாவங்களை கழுவும் வல்லமை கொண்டது என்று நம்புவதாகவும், 32% கிறிஸ்தவர்களும், கங்கையின் சக்தியை நம்புவதாகவும், இந்த ஆய்வு தெரிவித்துள்ளது. இந்த மூன்று பெரு மதங்களைச் சேர்ந்தவர்களுமே பெரியவர்களை மதிப்பது தங்கள் மத கொள்கைக்கு மிகவும் முக்கியமானது என்று கூறியுள்ளனர்.

நண்பர்களை மத அடிப்படையில் தேர்வு செய்கிறார்கள்

இப்படி பிற மதங்களை மதிப்பது ஒரு பக்கம் என்றாலும், இந்தியாவில், ஒரு நபரின் நண்பரின் மதம் பெரும்பாலும் அவர் சார்ந்த மதமாகத்தான் இருக்கிறதாம். சில இந்தியர்களுக்கு (13%) கலப்பு நண்பர்கள் வட்டம் இருப்பதாகக் கூறுகிறது. இந்துக்களில் கிட்டத்தட்ட பாதி (47%) பேர் தங்கள் “நெருங்கிய நண்பர்கள்” அனைவரும் இந்துக்கள் என்று கூறியுள்ளனர். 39 சதவீதம் இந்துக்கள், தங்களுக்கு இந்துக்கள் மட்டுமே நண்பர்களாக இருப்பதாக கூறியுள்ளனர். 61 சதவீதம் பேர் பிற மதத்தைச் சேர்ந்தவர்களும் தங்களுக்கு நண்பர்களாக இருப்பதாக கூறியுள்ளனர். 44% முஸ்லிம்கள் தங்களுக்கு தங்கள் மதத்தைச் சேர்ந்த நண்பர்கள் உள்ளதாக கூறியுள்ளனர். 56 சதவீதம் முஸ்லீம்கள் தங்களுக்கு பிற மதத்தைச் சேர்ந்தவர்களும் நண்பர்கள் என்று கூறியுள்ளனர். 56% கிறிஸ்தவர்கள் தங்களது நண்பர்கள் தங்கள் மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறியுள்ளனர். 44 சதவீதம் கிறிஸ்தவர்கள் தங்களுக்கு பிற மதத்தைச் சேர்ந்தவர்களும் நண்பர்கள் எனக் கூறியுள்ளனர்.

வெவ்வேறு மதத்தவர்கள் இடையே திருமணம்

வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்துகொள்வதற்கு, பெரும்பாலான இந்துக்கள் 67% பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முஸ்லிம்களில் 80% பேருக்கு இதுபோன்ற திருமணங்களில் உடன்பாடு இல்லை. சீக்கியர்கள் (59%), மற்றும் சமணர்கள் (66%) இவ்வாறு கருத்து கூறியுள்ளனர். ஆனால், கிறிஸ்தவர்கள் இந்த விஷயத்தில் ரொம்ப ஸ்ட்ரிக்ட் இல்லை. கிறிஸ்தவர்களில் 37% பேர் மட்டும்தான் பிற மதத்தோடு திருமண உறவு வேண்டாம் என்று கூறியுள்ளனர். பவுத்தர்களில் 46% பேர் இவ்வாறு கூறினர்.

அண்டை வீட்டுக்காரர்களாக பிற மதத்தவர்கள்

அதேபோல ஒட்டுமொத்தமாக 36% இந்துக்கள் தாங்கள் முஸ்லீமுக்கு அருகில் அதாவது அண்டை வீடாக வாழ விருப்பமில்லை என்று கூறியுள்ளனர. 31% கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லீம்களை அண்டை வீட்டாராக ஏற்க தயாரில்லை என்று கூறுகிறார்கள். சமணர்களில், 54% பேர் ஒரு முஸ்லீம் அண்டை வீட்டாரை ஏற்க தயாரில்லை என்று கூறியுள்ளனர். இதற்கு நேர்மாறாக, பவுத்தர்கள் மற்ற மதக் குழுக்களை சேர்ந்தவர்களை அண்டை வீட்டுக்காரர்களாக ஏற்றுக் கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர். பவுத்தர்களில் 80% பேர் முஸ்லீம், கிறிஸ்தவர், சீக்கியர் அல்லது சமணர்களை அண்டை வீட்டுக்காரராக ஏற்றுக் கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர்.

பாஜக அரசியல் மனநிலை

இதில் இன்னொரு முக்கிய தகவலும் வெளியாகியுள்ளது. 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்த இந்துக்கள், தங்களுடன் பிற மதத்தவர்கள் கலந்து இருப்பதை விரும்பாதவர்கள் என்று தெரிய வந்துள்ளது. பாஜகவுக்கு வாக்களித்த இந்துக்களில் பாதி பேர் (51%) மட்டுமே முஸ்லீமை அண்டை வீட்டாராக ஏற்க தயார் எனக் கூறியுள்ளனர். ஒரு கிறிஸ்தவரை அண்டை வீட்டுக்காரராக ஏற்க தயார் என்று, 53% பேர் தெரிவித்துள்ளனர். மற்ற கட்சிகளுக்கு வாக்களித்தவர்களில் முறையே 64% மற்றும் 67% மக்கள் இவ்வாறு முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்தவர்களோடு கலந்து வாழ்வதில் பிரச்சினை இல்லை எனக் கூறியுள்ளனர். எனவே மத சகிப்புத்தன்மை விஷயங்களில் பாஜக கட்சியின் செல்வாக்கு இருப்பதை இந்த சர்வே உறுதி செய்கிறது.

தென் இந்தியாவின் தனித்துவம்

இதேபோல மக்களின் குணங்களை நிர்ணயிப்பதில் புவியியல் ஒரு முக்கிய காரணியாக இருந்தது, தென்னிந்தியாவின் மக்கள் அதிக மத ரீதியாக ஒருங்கிணைந்தவர்களாகவும், மதங்களுக்கு இடையிலான திருமணங்களை குறைவாக எதிர்ப்பவர்களாகும் இருந்தனர். தெற்கில் உள்ள மக்கள் “மற்ற பிராந்தியங்களில் உள்ளவர்களை விட தங்கள் நெருங்கிய நண்பர்களாக அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களையும் ஏற்றுக் கொள்கிறார்கள். தென் மாநிலங்களில் உள்ள இந்துக்களில், 31% பேர் மட்டும்தான், தங்கள் நெருங்கிய நண்பர்கள் அனைவரும் இந்துக்கள் என்று கூறியுள்ளனர். ஆனால், தென் மாநிலங்களில், 69 சதவீதம் இந்துக்கள், அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் தங்களது நெருங்கிய நண்பர்கள் எனக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share on facebook
Facebook
Share on google
Google+
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on whatsapp
WhatsApp