சென்னை: இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படங்களை இயக்க இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்கக்கோரி லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கை தனிநீதிபதி தள்ளுபடி செய்த நிலையில் உத்தரவை எதிர்த்து லைகா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.
இந்தியன் படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து 25 ஆண்டுகள் கழித்து மீண்டும் கமலுடன் இயக்குநர் ஷங்கர் கூட்டணி வைத்து இந்தியன் 2 படத்தை உருவாக்க களமிறங்கினார்.
ஆனால், எதிர்பாராத விதமாக ஏகப்பட்ட குழப்பங்களும் பிரச்சனைகளும் எழுந்த நிலையில், படம் அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டது.
ஷங்கர் இயக்கத்தில் கமல்
ஜென்டில்மேன், காதலன் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து உலக நாயகன் கமல்ஹாசன் உடன் இணைந்து இயக்குநர் ஷங்கர் உருவாக்கிய இந்தியன் திரைப்படம் 1996ம் ஆண்டு வெளியானது. லஞ்சத்துக்கு எதிரான கதையாக உருவான இந்த படம் தேசிய விருதுகளையும் பெற்று பெரு வெற்றி கண்டது.
முதல்வன்
இந்தியன் படத்தின் வெற்றிக்கு பிறகு ரஜினியை வைத்து இயக்குநர் ஷங்கர் முதல்வன் படத்தை இயக்க திட்டமிட்டு இருந்தார். ஆனால், கால்ஷீட் காரணமாக முதல்வன் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கவில்லை. நடிகர் அர்ஜுனை ஹீரோவாக்கி அந்த படத்தையும் சூப்பர் ஹிட் ஆக்கினார் ஷங்கர்.
மூன்று படங்கள்
பாய்ஸ், அந்நியன் என வெரைட்டி காட்டி படங்களை ஹிட் கொடுத்து வந்த இயக்குநர் ஷங்கரை அழைத்த ரஜினிகாந்த் அவருடன் இணைந்து படம் பண்ண சம்மதித்தார். 2007ம் ஆண்டு வெளியான சிவாஜி மிகப்பெரிய வசூல் வேட்டையை ஆட, 2010ம் ஆண்டு எந்திரன் மற்றும் 2018ல் 2.0 என மொத்தம் மூன்று படங்களில் ரஜினியுடன் கூட்டணி அமைத்தார் ஷங்கர்.
எந்திரனில் கமல்
ரஜினி நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த எந்திரன் படத்திற்கு ஷங்கரின் முதல் தேர்வு நடிகர் கமல்ஹாசன் தான். ஆனால், சில பல காரணங்களுக்காக அந்த கூட்டணி அப்போது அமையாமல் போனது. மீண்டும் கமலை இயக்க வேண்டும் என்கிற முனைப்பில் இருந்த ஷங்கர் இந்தியன் 2வை கையில் எடுத்து கைகோர்த்தார்.
பலி வாங்கிய படப்பிடிப்பு
விறுவிறுப்பாக நடந்து வந்த இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து காரணமாக பரிதாபமாக மூன்று பேர் உயிரிழந்தனர். அங்கே தொடங்கிய பிரச்சனை காரணமாக ஒட்டுமொத்த படமும் டிராப் ஆகும் சூழ்நிலை உருவாகி விட்டது. தயாரிப்பு தரப்புக்கும் இயக்குநர் ஷங்கருக்கும் இடையே கடும் மோதல் உருவானது கோர்ட் படி ஏறி நிற்கிறது.
ஷங்கருக்கு சக்சஸ்
நடிகர் கமல் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படம் தயாராகி வருகிறது. இந்நிலையில், இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படங்களை இயக்க ஷங்கருக்கு தடை விதிக்க கோரி, லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த தனிநீதிபதி, இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படங்களை இயக்க இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்கக்கோரி லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
சும்மா விடுமா லைகா
இந்தநிலையில் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து லைகா சார்பில் தாக்கல் செய்யபட்ட மேல்முறையீட்டு மனுவானது தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, லைகா தரப்பில், தனி நீதிபதியின் உத்தரவு நகல் இல்லாமல் மேல் முறையீட்டு வழக்கை விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் எனக் கோரப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, லைகா நிறுவனத்தின் மேல் முறையீட்டு வழக்கை, தனி நீதிபதி உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல் இல்லாமல் விசாரணைக்கு பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
ஷங்கர் பிசி
வழக்கு ஒரு பக்கம் சென்று கொண்டு இருக்க இயக்குநர் ஷங்கரோ ராம்சரணை வைத்து இயக்கும் புதிய படத்தில் பிசியாகி விட்டார். சமீபத்தில் நடிகை கியாரா அத்வானியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரும் இந்த படத்தில் நடிக்கிறார் என்கிற அப்டேட்டை போட்டோவுடன் வெளியிட்டு அசத்தினார்.
பாலிவுட்டில் படம்
இந்தியளவில் மீண்டும் தான் யார் என்று நிரூபிக்கும் நேரத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் இயக்குநர் ஷங்கர் டோலிவுட் ராம்சரணை தொடர்ந்து பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை வைத்து அந்நியன் படத்தின் இந்தி ரீமேக்கை உருவாக்க உள்ளார். அது குறித்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியான நிலையில், லைகா நிறுவனம் பயங்கர கடுப்பில் இருக்கிறதாம்.