சென்னை: சென்னையில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதால் சுனாமி ஏற்படும் என்ற அச்சம் தேவையில்லை என தமிழ்நாடு வெதர்மேன் ஆறுதலான செய்தியை தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சென்னை- ஆந்திரா பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகியுள்ளது. ஆழ்வார்பேட்டை, அண்ணாநகர், பெசன்ட் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இந்த நில அதிர்வு உணரப்பட்டது. இதனால் மக்கள்
சுனாமி
கடந்த 2004 ஆம் ஆண்டு சுனாமி ஏற்படுவதற்கு முன்னர் இந்திய பெருங்கடலில் 150 கி.மீ. தூரத்தில் ஆழ்கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 9.3 ஆக பதிவானது. இது இரண்டாவது வலிமையான நிலநடுக்கம் ஆகும். இதையடுத்து கடல் கொந்தளித்து சுனாமி ஏற்பட்டதை அடுத்து 14 நாடுகளைச் சேர்ந்த 2.30 லட்சம் பேர் உயிரிழந்துவிட்டார்கள்.
வங்கக் கடலில்
17 ஆண்டுகள் ஆன நிலையிலும் இந்த சுனாமி சம்பவங்கள் நம் கண் முன் வந்து அவ்வப்போது அச்சத்தை ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில் இன்று வங்கக் கடலில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் அடுத்தது சுனாமி ஏற்படுமோ என கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
சுனாமி ஏற்படாது
ஆனால் இந்த நில அதிர்வு மூலம் சுனாமி ஏற்படாது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் மக்கள் இந்த நில அதிர்வை கண்டு அச்சம் கொள்ளத் தேவையில்லை. நில அதிர்வு வந்து போய்விட்டது. அதுவும் சென்னைக்கு மிக தூரத்தில் வந்துள்ளது.
மறக்க வேண்டாம்
எனவே வாட்ஸ் ஆப்களில் வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். இந்த நில அதிர்வு மூலம் சுனாமி ஏற்படும் அச்சுறுத்தல் இல்லை. இது போன்ற ஒரு நில அதிர்வை கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதமும் பார்த்துள்ளோம் என்பதை மறக்க வேண்டாம் என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
முந்தைய பாதிப்புகள்
பொதுவாக இயற்கைச் சீற்றங்கள் ஏற்படும் காலங்களில் முந்தைய பாதிப்புகளுடன் புதிய சீற்றத்தையும் மக்கள் ஒப்பிட்டு குழம்பி கொண்டிருக்கும் நிலையில் சமூகவலைதளங்களில் தேவையில்லாத வதந்திகள் பரவுவதால் மக்களை மேலும் அச்சமடையச் செய்கிறது. 2015 ஆம் ஆண்டு சென்னை பெருவெள்ளம் ஏற்பட்டவுடன் அடுத்த 2016 இலும் இது போன்று வெள்ளம் ஏற்படும் என வதந்தி பரப்பியதையும் அறிவோம். அது போல் 6 ஆண்டுகள் கழித்து கடந்த வடகிழக்கு பருவமழையின் போது செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிட்ட போதும் 2015 ஐ போல் சென்னையின் பெரும்பகுதிகள் மூழ்கும் என வதந்திகள் பரவின. எந்த விஷயமாக இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே மக்கள் நம்ப வேண்டும். அதை விட்டுவிட்டு வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் சிலர் பிரபலமடைவதற்காக எழுதும் பொய்யான செய்திகளை நம்பக் கூடாது.