டெல்லி: உலக நாடுகள் முழுவதையும் ஒன்றரை ஆண்டுகளாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கொரோனா வைரஸ் ஒவ்வொரு உருவமாக மாறுபாடு அடைந்து மனிதர்களை தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது.
பல்வேறு நாடுகளில் இரண்டாவது அலைக்கு டெல்டா வகை கொரோனா வைரஸ்தான் காரணம் என்பது தெளிவானது. இந்த நிலையில் டெல்டா வைரஸை விட ஆபத்தான லாம்ப்டா’ என்ற திரிபு வகை வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தென் அமெரிக்க நாடான பெருவில் முதலில் கடந்த ஜூன் மாதம் லாம்ப்டா வகை கண்டறியப்பட்டுள்ளது. லாம்ப்டா வைரஸ் மிகவும் வீரியம் மிக்கதாகவும், பல்வேறு நாடுகளில் வேகமாகவும் பரவி வருகிறது.
லாம்ப்டா வைரஸ்
இங்கிலாந்து, அமெரிக்கா, இஸ்ரேல், ஸ்பெயின், ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, துருக்கி மற்றும் ஆஸ்திரேலியா உள்பட 30-க்கும் மேற்பட்ட நாடுகளிலும் லாம்ப்டா மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு நாடுகளில் மூன்றாம் அலைக்கு லாம்ப்டா வைரஸ் மாறுபாடு காரணமாக இருக்கலாம் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
82% பாதிப்புகள்
மே மற்றும் ஜூன் மாதங்களில் பெருவில் பெறப்பட்ட 82% பாதிப்புகள் லாம்ப்டா மாறுபாட்டின் காரணமாக இருந்தன, அதே நேரத்தில் சிலியில் 32% பாதிப்புகளுக்கு பின்னால் இந்த மாறுபாடு உள்ளது என்று WHO தரவு கூறுகிறது. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அர்ஜென்டினாவில் 37% பாதிப்புகள் இந்த மாறுபாட்டின் காரணமாக இருந்தன.
உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ள மிக மோசமான கொரோனா வகை வைரஸுகளில் லாம்ப்டாவும் ஒன்று என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை மணி அடித்திருக்கிறது. லாம்ப்டா மாறுபாட்டின் ஸ்பைக் புரதம் ஏழு பிறழ்வுகளைக் கொண்டது. லாம்ப்டா திரிபுகளில் மேலும் மரபணு மாற்றங்கள் ஏற்பட்டு, அவை அதிக தாக்கத்தை ஏற்படுத்தினால், தடுப்பூசிகளால் உண்டான ஆன்டிபாடிகளையும், உடலில் இயற்கையாக உருவாகியிருக்கும் நோயெதிர்ப்பு சக்தியையும்கூட அழித்துவிடும் தன்மை கொண்டதாக இருக்கக்கூடும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
தடுப்பூசிகள் செயல்படுமா?
லாம்ப்டா மாறுபாட்டிற்காக வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையிலான ஆய்வுகள் பரிந்துரைத்தபடி, தற்போதுள்ள எம்ஆர்என்ஏ தடுப்பூசிகள் அதை நடுநிலையாக்கும் திறன் கொண்டவை, ஆனால் இந்த கொரோனா வைரஸ் மாறுபாட்டிற்கு எதிரான தடுப்பூசி செயல்திறனை உறுதிப்படுத்த கூடுதல் ஆய்வுகள் தேவை. இந்த வைரஸ் தடுப்பூசிக்கு எதிராக வினை புரியுமா? என்பது இப்போது வரை நிரூபிக்கபடவில்லை.
இந்தியாவில் பரவுமா?
இன்றைய நிலவரப்படி எந்த லாம்ப்டா மாறுபாடு வைரஸும் இந்தியாவில் காணப்படவில்லை. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்வதால் லாம்ப்டா வைரஸ் தொற்று படிப்படியாக பரவுகிறது. இதனால் இது இந்தியாவிலும் பரவுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன என்று மருத்துவ ஆராச்சியாளர்கள் கூறியுள்ளனர்.