மும்பை: மகாராஷ்டிராவில் மத்திய அமைச்சர் நாராயண் ரானே கைது செய்யப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கைது சம்பவத்திற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் சிவசேனா மற்றும் பாஜகவினர் இடையே மும்பையில் பல்வேறு இடங்களில் மோதல் நடந்து வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் புதிதாக மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட கொண்ட நாராயண் ரானே மும்பையில் கடந்த சில நாட்களாக ‘ஜன் ஆசீர்வாத யாத்திரை’ என்ற பெயரில் பேரணி நடத்தி வந்தார். மும்பையில் இருந்து சிந்துதுர்க் பகுதி வரை மிக நீண்ட பேரணியை இவர் மேற்கொண்டு வந்தார்.
பல்வேறு இடங்களில் பொது கூட்டங்களை நடத்தி மக்கள் மத்தியில் இவர் பேசினார். முக்கியமாக மும்பையில் பல்வேறு இடங்களில் சிவசேனா கூட்டணி ஆட்சிக்கு எதிராக கருத்து தெரிவித்தார். இதனால் நாராயண் ரானே யாத்திரை சென்ற இடங்களில் எல்லாம் பாஜக சிவசேனா உறுப்பினர்கள் இடையே சிறு சிறு மோதல் ஏற்பட்டது.
மோதல்
இந்த யாத்திரையில் பேசிய நாராயண் ரானே, மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கன்னத்திலேயே அறைந்திருப்பேன் என்று கூறியது பெரிய சர்ச்சையானது. இந்தியா சுதந்திரம் அடைந்த தினம் கூட உத்தவ் தாக்கரேவிற்கு தெரியவில்லை. இந்தியா சுதந்திரம் அடைந்து எத்தனை வருடங்கள் ஆகியுள்ளது என்று கூட அவருக்கு தெரியாமல் உதவியாளரிடம் கேட்கிறார். அவரின் இந்த செயலை ஏற்க முடியாது. அவர் இப்படி பேசும் போது நான் அருகில் இருந்திருந்தால் அவரின் கன்னத்திலேயே அறைந்திருப்பேன் என்று நாராயண் ரானே குறிப்பிட்டு இருந்தார்.
नारायण राणे को गिरफ्तारी के वक्त खाना भी नही खाने दिया गया !! भाजपा #ShivSena pic.twitter.com/v1awrcJqti
— Abu Taha (@Imaftab05) August 24, 2021
சர்ச்சை
இவரின் பேச்சு பெரிய அளவில் சர்ச்சையான நிலையில் நாராயண் ரானேவிற்கு எதிராக சிவசேனா கட்சியினரும் இதன் மாணவ அமைப்பான யுவ சேனா பிரிவினரும் கடுமையான போராட்டத்தில் ஈடுப்பட்டனர். மும்பையில் பாஜக அலுவலகம் முன்பும், பல்வேறு இடங்களிலும் சிவசேனா கட்சியினர் போராட்டம் செய்தனர். இதையடுத்து நாராயண் ரானேவிற்கு எதிராக போலீசில் பல்வேறு இடங்களில் வழக்கும் பதியப்பட்டது. பெயிலில் வெளியேற வர முடியாத பிரிவுகளிலும் சில போலீஸ் நிலையங்களில் வழக்கு பதியப்பட்டது.
கைது
இதையடுத்து நாராயண் ரானே கைது செய்யப்படுவார் என்று காலையிலேயே எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே இன்று பிற்பகல் இரண்டரை மணிக்கு நாராயண் ரானே மும்பை போலீசார் மூலம் கைது செய்யப்பட்டார். அவரின் வீட்டில் சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போதே போலீசார் உள்ளே புகுந்து கைது செய்தனர். மத்திய அமைச்சர் ஒருவரை, கட்சிக்காரர்கள் சுற்றி நிற்கும் போது, மாநில போலீஸ் படை கைது செய்து அழைத்து சென்றது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இவருக்கு எதிராக பெயிலில் வர முடியாத பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டு இருப்பதாலும், மும்பை ஹைகோர்ட் இவர் தொடுத்த வழக்கை அவசரமாக விசாரிக்கவில்லை என்பதாலும் இப்போதைக்கு இவர் வெளியே வருவதும் கஷ்டமாகி உள்ளது.
போராட்டம்
இந்த நிலையில்தான் மும்பையில் பல்வேறு பகுதிகளில் சிவசேனா பாஜகவினர் இடையே மோதல் நடைபெற்று வருகிறது. சிவசேனா கட்சியினரை பாஜகவினர் தாக்குவதும், பதிலுக்கு பாஜகவினரை சிவசேனா கட்சியினர் தாக்குவதும் என்று மிகப்பெரிய மோதல் மும்பையில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இன்று காலையில் இருந்தே இரண்டு தரப்பிற்கும் இடையில் மோதல் நடந்த நிலையில் தற்போது இந்த சண்டை விஸ்வரூபம் எடுத்துள்ளது.
வீடியோ
இரண்டு கட்சியினரும் மாறி மாறி கட்டை, கம்புகளால் தாக்கிக்கொள்ளும் வீடியோவும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மத்திய அமைச்சரை மாநில போலீசார் கைது செய்வது என்பது மிகப்பெரிய விஷயம் என்பதால் மும்பையின் பல்வேறு பகுதிகள் பதற்றமாக காணப்படுகிறது. பாஜகவினர் மத்தியில் இந்த கைது நடவடிக்கை கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது.