பெங்களூர்: கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் எடியூரப்பா. அவரது ராஜினாமாவை ஆளுநர் ஏற்றுக் கொண்டார்.கர்நாடகாவில் நடைபெற்று வந்த காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி கூட்டணி ஆட்சி கலைந்த நிலையில் எடியூரப்பா தலைமையில் பாஜக அரசு அமைந்தது.ஜூலை 26ஆம் தேதியான இன்றுடன், எடியூரப்பா அரசு இரண்டாண்டு பதவி காலத்தைப் பூர்த்தி செய்கிறது.
ராஜினாமா அறிவிப்பு
இதையொட்டி இன்று மதியம் செய்தியாளர்கள் சந்திப்புக்கும் விருந்து நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்திருந்தார் எடியூரப்பா. இரண்டு ஆண்டு காலத்தில் தனது அரசு செய்த சாதனைகளை அப்போது அவர் பட்டியலிட்டார். பின்னர் முதல்வர் பதவியில் இருந்து, தான், ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்தார்.
கண்ணீர் விட்ட எடியூரப்பா
உணவு விருந்து முடிந்த பிறகு ஆளுநர் மாளிகைக்கு சென்று தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியிருப்பதாக எடியூரப்பா தெரிவித்தார். இவர் அவ்வாறு பேசும் போது, குரல் தழுதழுத்தது. கண்கள் கலங்கின. கண்ணீர் பெருக்கெடுத்தது. இருப்பினும், வருத்தத்தின் காரணமாக குரல் தழுதழுக்க வில்லை என்றும், 75 வயது தாண்டிய நிலையிலும், பாஜக வகுத்த வயது நெறிமுறைகளை தளர்த்தி தனக்கு கூடுதலாக இரண்டு வருடங்கள் முதல்வர் பதவியில் இருக்க பாஜக மேலிடம் அனுமதித்தது.. அதை நினைத்து ஆனந்தக் கண்ணீர் வருகிறது என்று அப்போது எடியூரப்பா தெரிவித்தார்.
எடியூரப்பா மீது குற்றச்சாட்டு
கர்நாடகாவில் எடியூரப்பா அரசில், அவரது மகன் மற்றும் குடும்பத்தார் தலையீடு இருப்பதாக, பாஜக எம்எல்ஏக்கள் சிலர் அவ்வப்போது குற்றம்சாட்டி பொதுவெளியில் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இது பாஜக மேலிடம் கவனத்திற்கு சென்றது. மேலும் அடுத்த சட்டசபை தேர்தலுக்கு முன்பாக இளம் தலைவர் ஒருவரை பாஜகவுக்கு தலைமை ஏற்க தயார் படுத்த வேண்டிய தொலைநோக்கு சிந்தனை பாஜக தலைமைக்கு இருந்தது. இதன் காரணமாக வயது முதிர்வை காரணம் காட்டி எடியூரப்பாவை பதவியில் இருந்து விலகும்படி பாஜக மேலிடம் வற்புறுத்தியது.
மோடியுடன் சந்திப்பு
கடந்த வாரம் டெல்லியில், அவர் நரேந்திர மோடியை சந்தித்த போது கூட இந்த விஷயம் வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால்தான், தனக்கு விருப்பம் இல்லாது விட்டாலும், தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அதேநேரம், கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் என்ற சஸ்பென்ஸ் நீடிக்கிறது.
எடியூரப்பா ராஜினாமா
இதனிடையே அறிவித்தபடி, ஆளுநர் மாளிகைக்கு சென்ற எடியூரப்பா தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அதை ஆளுநரும் ஏற்றுக் கொண்டார். காபந்து முதல்வராக தொடரும்படி எடியூரப்பாவை ஆளுநர் கேட்டுக் கொண்டார். இதை எடியூரப்பா ஏற்றுக் கொண்டார். தற்போது கன்னட மக்களின், ஆஷாட மாதம் நடைபெற்று வருகிறது. இப்போது புதிய விஷயம் எதையும் செய்ய மாட்டார்கள். ஆஷாடா முடிந்ததும், புதிய முதல்வர் பதவியேற்பார் என்று கூறப்படுகிறது.