சென்னை: அதிமுக அதிகாரபூர்வ நாளேடு நமது அம்மா அலுவலகத்தில் ரெய்டு நடந்து வருகிறது.. அந்த பத்திரிகையின் வெளியீட்டாளர் சந்திரசேகர் சம்பந்தப்பட்ட இடங்களிலும் காலையிலிருந்தே சோதனை நடந்து வருகிறது.. இதற்கு என்ன காரணம்? பின்னணி என்ன?
ஜெயலலிதா இருந்தபோதே அதிமுகவின் செய்திகள் அனைத்தையும் ஜெயா டிவி ஒளிபரப்பி வந்தது… முழுக்க முழுக்க ஜெயலலிதா மற்றும் அதிமுக சம்பந்தப்பட்ட செய்திகள்தான் அதில் ஒளிபரப்பாகும்.
அப்போதே சசிகலா குடும்பத்தினரின் ஆதிக்கம் ஜெயா டிவி மீது படர்ந்திருந்தது.. ஆனால், அவரது மறைவுக்கு பிறகு சசிகலா குடும்பத்தினரிடம் ஜெயா டிவி நிர்வாகம் நேரடி கட்டுப்பாட்டின்கீழ் இயங்கி வந்தது..
பத்திரிகை
அதேபோல, அதிமுக நாளேடான நமது எம்ஜிஆர் பத்திரிக்கையும் அவர்கள் வசம்தான் இருந்தன. அதாவது, நமது எம்ஜிஆர் அதிகார பூர்வ ஏடாக இருந்த நிலையில், அது சசிகலா பக்கம் சென்றதால் நமது அம்மா ஆரம்பிக்கப்பட்டது..
நாளிதழ்
குறிப்பாக அப்போதைய காலகட்டத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் வசமுள்ள அதிமுக செய்திகளை வெளியிடுவதற்காகவே நமது அம்மா நாளிதழ் தொடங்கப்பட்டது… ஆனால், கட்சி சார்பில் இது ஆரம்பிக்கப்படவில்லை என்றே தெரிகிறது.. அதேசமயம், ஒரு சில அமைச்சர்களின் கட்டுப்பாட்டில் இயங்கி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. அந்த அமைச்சர்கள் யார் என்று உடனடியாக தெரியவில்லை.. குறிப்பாக, எடப்பாடி பழனிசாமி, சிவி சண்முகம், தங்கமணி, வேலுமணி ஆகியோரின் கட்டுப்பாட்டிலேயே அதிமுகவின் மீடியா உள்ளதாக முதலில் கருதப்பட்டது..
4 பேர்
பிறகுதான், எஸ்பி வேலுமணிக்கு சொந்தமான கட்டிடத்தில் அம்மா நாளிதழ் இயங்கி வருகிறது என்ற விஷயமே தெரியவந்தது. இதற்காக கட்சிக்குள் ஒருமுறை ஓபிஎஸ்ஸிடம் மனஸ்தாபம்கூட எழுந்தது.. அதிமுக பொருளாளராக அப்போது ஓபிஎஸ் இருந்ததால், அவரிடம்கூட அதிமுகவின் மீடியாவை நடத்துவதற்கு பணம் கேட்டதாகவும், அதற்கு நாளிதழையும், டிவியையும் கட்சிப்பெயருக்கு மாற்றினால் பணம் தருவதாகவும் ஓபிஎஸ் கறாராக சொல்லிவிட்டதாகவும் செய்திகள் கசிந்தன.
மூத்த தலைவர்கள்
இதெல்லாம் பழைய கதை என்றாலும், இதில் கவனிக்கத்தக்க விஷயம், இப்போது வரை அனைத்து மூத்த தலைவர்களுமே ஒதுங்கிவிட்ட நிலையில், முழுக்க முழுக்க வேலுமணியின் கீழ் மட்டுமே நமது அம்மா இயங்கி வருகிறது.. ஒவ்வொரு முறை தேர்தலின்போது, இந்த பத்திரிகையை தனக்கான களமாக பயன்படுத்தி கொள்வார் வேலுமணி.. முக்கியமாக கொங்கு மண்டல அதிமுக புள்ளிகளின் செய்திகளை ஆக்கிரமித்தபடியே இந்த நாளிதழ் வலம்வந்ததை மறுக்க முடியாது.
ரெய்டு
இந்த பத்திரிகை ஆபீஸ் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ளது… வேலுமணிக்கு சொந்தமான வீடு, நிறுவனங்களில் ரெய்டு நடந்து வரும் நிலையில், சென்னையில் உள்ள நமது அம்மா அலுவலகத்திலும் ரெய்டு நடந்து வருவதற்கு பின்னணி காரணியே இதுதான்.. அதுமட்டுமல்ல, இந்த பத்திரிகையில் சந்திரசேகர் என்பவர்தான் வெளியீட்டாளராக உள்ளார்.. இவரும் வேலுமணியின் நெருங்கிய நண்பர்தானாம்.. அதேசமயம், இது கட்சி நடத்தும் பத்திரிகை இல்லை என்ற நிஜமும் வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கிறது..!