டெல்லி: உத்தரபிரதேச மாநிலத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பாஜக அரசு மீது பிராமண சமுதாயத்தினர் அதிருப்தியில் உள்ளனர். எனவே அவர்களின் வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொள்ள பாஜக முயற்சிகளை ஆரம்பித்துள்ளது.
இன்னொரு பக்கம் இந்த அதிருப்திகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் பிராமண சமுதாயத்தை நோக்கி முன்னெடுப்புகளை துவங்கியுள்ளன.
மற்ற மாநிலங்களை ஒப்பிட்டால், உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிராமணர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகம். பெரும் மக்கள் தொகை கொண்ட அந்த மாநிலத்தில் சுமார் 12% பிராமண சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் வாழ்கிறார்கள் . எனவேதான் அவர்கள் ஓட்டு என்பது ஒவ்வொரு கட்சிக்கும் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. சில தொகுதிகளில் 20 சதவீதம் வரை பிராமணர்கள் வாக்குகள் இருக்கின்றன.
உத்தர பிரதேச மாநில அரசியல்
எனவே எந்த ஒரு கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்றாலும் பிராமணர்களின் வாக்கு அதில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. கடந்த 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது பெரும்பான்மை பிராமணர்கள் பாஜகவுக்கு ஓட்டு போட்டனர். ஆனால் யோகி ஆதித்யநாத் தலைமையில் அங்கு நடந்து வரும் ஆட்சி மீது அவர்களுக்கு தொடர்ந்து அதிருப்தி பெருகிக்கொண்டே செல்கிறது. 2020ஆம் ஆண்டு தாதா, விகாஸ் துபே, போலீஸாரால் என்கவுண்டர் செய்யப்பட்டபோது அரசு மீதான பிராமணர்கள் கோபம் இன்னும் அதிகரித்தது. ஏனென்றால் விகாஸ் துபே பிராமண சமுதாயத்தைச் சேர்ந்தவர் ஆகும். இந்த என்கவுண்டர் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று பல பிராமண அமைப்புகள் அப்போது முதல் கோரிக்கை விடுத்து வருகின்றன .
யோகி அரசின் என்கவுண்டர்கள்
கடந்த 2017ஆம் ஆண்டு முதல் இதுவரை அரசு நடவடிக்கை காரணமாக 500க்கும் மேற்பட்ட பிராமணர்கள் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொல்லப்பட்டிருப்பதாக அகில பாரத பிராமணர் மகா சபா தலைவர், ராஜேந்திரநாத் திரிபாதி குற்றம் சுமத்தியுள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், பிராமணர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் இதற்கு முந்தைய அரசுகளிலும் கூட நடந்துள்ளன. ஆனால் யோகி ஆதித்யநாத் அரசில் இந்த எண்ணிக்கை மிகவும் அதிகமாக கூடிவிட்டது. இதுதான் பாஜக அரசு மீது பிராமணர்கள் கோபம் கொள்ள காரணம் என்று தெரிவித்துள்ளார். பிராமணர்கள் வாக்குகளை கவர்வதற்காக கடந்த வருடமே காங்கிரஸ் காய் நகர்த்த ஆரம்பித்துவிட்டது. அப்போது காங்கிரஸ் முன்னணி தலைவர்களில் ஒருவராக இருந்த ஜித்தின் பிரசாதா, “பிராமின் சேத்தனா பரிஷத்” என்ற பெயரில் பிராமணர்கள் உரிமை மீட்புக்காக ஒரு அமைப்பை தொடங்கினார். இதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் 20 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு பிராமண சமுதாயத்தினருக்கு தேவைப்படும் உதவிகள் மற்றும் சட்ட உதவிகள் செய்து தரப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.
யோகி ஆதித்யநாத் கேபினெட்
யோகி ஆதித்யநாத் அரசியல் பிராமணர்களுக்கு அமைச்சரவையில் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பது அதிருப்திக்கு இன்னொரு காரணம். மாநில அரசில் மொத்தம் 53 அமைச்சர்கள் இருக்கிறார்கள். இதில் 9 பேர் பிராமண சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் தினேஷ் ஷர்மா, ஸ்ரீகாந்த் ஷர்மா மற்றும் பிரஜேஷ் பதக் ஆகியோர்தான் முக்கியமான துறைகளின் அமைச்சர்களாக இருக்கிறார்கள். மற்ற அனைத்து அமைச்சர்களுமே இணை அமைச்சர்கள் என்ற அந்தஸ்தில் தான் இருக்கிறார்கள். தனி கேபினட் அமைச்சர்கள் கிடையாது. இந்த அமைச்சர்கள் யாரும் யோகி ஆதித்யநாத்திற்கு மிகவும் நெருக்கமானவர்களும் கிடையாது.
பாஜகவுக்கும் தெரியும்
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பெயர் தெரிவிக்க விரும்பாத பாஜக எம்எல்ஏ ஒருவர், ஆமாம்.. பிராமண சமுதாயத்தில் ஒரு பிரிவினர் தங்களை புறக்கணித்து விட்டதாக இந்த அரசின் மீது அதிருப்தியில் இருக்கிறார்கள். அவர்கள் தங்களுக்கு வேறு அரசியல் மாற்று கிடைக்குமா என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வேறு கட்சிகளுக்கு ஆதரவு கொடுப்பதை தவிர்ப்பதற்கு முடிந்த அளவுக்கு முயற்சி செய்து வருகிறோம். கட்சி மேலிடம் இதை கருத்தில் கொண்டு வேட்பாளர்களுக்கு டிக்கெட் தரும் போது பிராமண சமுதாயத்தினருக்கு அதிக அளவில் வாய்ப்புகளை வழங்கும் என்று நம்புகிறேன் . பிராமணர்கள் வாக்குகள் பிளவுபட்டால், கடந்த முறை வெற்றி பெற்றதைப் போல பாஜக மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்ய முடியாது என்று அவர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகள் வியூகம்
பாஜக மற்றும் யோகி ஆதித்தியநாத் அரசு மீது பிராமணர்கள் கோபத்தில் இருப்பதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதற்கு எதிர்க்கட்சிகள் முடிந்தளவுக்கு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன. யோகி ஆதித்யநாத் அரசு , பிராமணர்களுக்கு எதிரான அரசு என்று பகிரங்கமாகவே குற்றம் சாட்டுகின்றன. பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி சமீபத்தில் இதுபற்றி கூறுகையில், 2017 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது பிராமண சமுதாயத்திணே வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்ற பாஜக, இப்போது அவர்களை சுரண்டுகிறது. கொடுமைப்படுத்துகிறது என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
மாயாவதி கட்சி திட்டம்
பிராமணர்கள் ஆதரவுடன் பாஜக உத்தரபிரதேச மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தது. ஆனால் அவர்களுக்கு நல்லது செய்வதற்கு பதிலாக கொடுமைகளை செய்து வருகிறது. எனவே தான் பகுஜன் சமாஜ் கட்சி பிராமண சமுதாயத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மாநாடுகளை நடத்த உள்ளது என்று தெரிவித்துள்ளார் மாயாவதி. சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏ மனோஜ் பாண்டே ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், யோகி ஆதித்யநாத் அரசாங்கத்தின் கீழ் பிராமணர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. ஏகப்பட்ட கொடுமைகளை அனுபவித்து வருகிறார்கள். கொலைகள், என்கவுண்டர்கள் சர்வசாதாரணமாக இந்த சமுதாயத்தினரின் மீது நடத்தப்படுகிறது. இதற்கு பதிலடியாக பெரும்பான்மையான பிராமண சமுதாய மக்கள் சமாஜ்வாதி கட்சிக்கு ஓட்டுப் போடுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர்களாக்கியது காங்கிரஸ்
ஆகஸ்ட் 23-ஆம் தேதி முதல் சமாஜ்வாதி கட்சி பிரபுத் ஜன் சம்மேளனம்.. என்ற பெயரில் மாநாடுகளை ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்த திட்டமிட்டு இருக்கிறது. இது முழுக்க முழுக்க பிராமணர் வாக்குகளை தங்கள் பக்கம் திருப்புவதற்கான முயற்சியாக பார்க்கப்படுகிறது .அதே நேரம் மூத்த காங்கிரஸ் தலைவர் பிரமோத் திவாரி இந்த கட்சிகளின் செயல்பாடுகளை விமர்சனம் செய்துள்ளார். பிராமண சமுதாயத்திற்கு பாஜக என்ன செய்தது, பகுஜன் சமாஜ் கட்சி தான் என்ன செய்தது? ஆனால் இதுவரை உத்தரபிரதேச மாநிலத்தில் கமலாவதி திரிபாதி, என்.டி.திவாரி உட்பட பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த 6 பேர் காங்கிரஸிலிருந்து முதலமைச்சராகப் பட்டுள்ளனர் என்று தெரிவித்தார். இந்த முறையும் பிராமணர்கள் வாக்குகளைக் கவர்வதற்கு காங்கிரஸ் எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கிறது. பிரசார குழு தலைவராக பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு காங்கிரஸ் சீனியர் தலைவரை நியமிக்க அந்த கட்சி மேலிடம் திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
பாஜக பதில்
எதிர்க்கட்சிகள் இவ்வாறு காய் நகர்த்துவதை பாஜகவும் அறிந்து இருக்கிறது. உத்தரப் பிரதேச மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திரிபாதி ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் ஆகிய இரு கட்சிகளுமே ஜாதியை அடிப்படையாகக் கொண்ட கட்சிகள். எப்போதுமே அரசியலில் ஜாதியை வைத்து கணக்குப் போடும் கட்சிகள். ஆனால் பாஜக ஜாதி அரசியல் செய்யாது. வளர்ச்சி மட்டும் தான் எங்கள் குறிக்கோள். உத்தரபிரதேச மாநில மக்கள், அதிலும் குறிப்பாக பிராமண சமுதாய மக்கள், ஜாதி அரசியலில் வலையில் விழ மாட்டார்கள். மாநிலத்தின் எதிர்கால நலனை மனதில் வைத்து முடிவெடுப்பார்கள் என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.
பிராமணர்கள் நினைத்தால் ஆட்சி மாறும்
உத்தரபிரதேச மாநிலத்தில் 12% பிராமணர்கள் வாக்குவங்கி இருப்பதாக கூறப்பட்டாலும், தியாகி மற்றும் பூமிகார் போன்ற உப ஜாதிகளையும் கணக்கில் சேர்த்துக் கொண்டால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இது பற்றி அகில பாரதிய பிராமின் சங்கதான் மகா சங்கம் அமைப்பின் தலைவர் அசீம் பாண்டே கூறுகையில், உத்தரபிரதேச மாநிலத்தில் பிராமணர்கள் மக்கள் தொகை 13 சதவிகிதத்திற்கும் அதிகமாகும். இந்த மாநிலத்தில் மிகப் பெரும்பான்மையாக உள்ள ஒரே ஜாதி என்று கணக்கு போட்டு பார்த்தால் அது பிராமணர்கள்தான். பிராமணர்கள் நினைத்தால் ஆட்சி அதிகாரத்திற்கு யாரையும் கொண்டு வர முடியும். அதே போல அதிகாரத்தில் இருந்து அவர்களை நீக்கவும் முடியும். இதுதான் கடந்த கால இந்த மாநில அரசியல் வரலாறு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
பிராமணர்கள் ஆதரவு
டெல்லியை சேர்ந்த ஸ்டடி ஆப் டெவலப்பிங் சொசைட்டி அமைப்பு நடத்திய ஆய்வில், 2017 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலின்போது 80% பிராமண சமுதாயத்தினர் பாஜகவுக்கு ஓட்டு போட்டது தெரியவந்தது. இது 2007 ஆம் ஆண்டில் 40% மற்றும் 2012 ஆம் ஆண்டில் 38 சதவீதமாக தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.