இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே காய்கறி, சமையல் எரிவாயு, பெட்ரோல் டீசல் என மக்கள் அத்தியாவசிய தேவைக்காக பயன்படுத்தும் பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நாட்டு மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக பால் மற்றும் எண்ணெய் உள்ளிட்ட சில பொருட்களின் விலை மேலும் உயரக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மார்ச் மாதம் தொடங்கியுள்ள நிலையில், பட்ஜெட் அறிவிப்புகளின் படி பல பொருட்களில் விலை ஏற்றம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து உள்ளது உலகப் பொருளாதாரத்தில் கடும் பாதிப்புகளை உண்டாக்கி வருகிறது. போர் சூழலால் பங்குச்சந்தைகள் நிலையற்றதாக மாறியுள்ளன. ரஷ்யாவின் போர் நடவடிக்கைகளை கண்டித்து உலக நாடுகள் அதன் மீது பொருளாதார தடையை விதித்து வருவதால் கச்சா எண்ணெய் மட்டுமின்றி கோதுமை, சமையல் எண்ணெய், உலோகங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் உயரக் கூடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்து இருந்தனர்.
சமையல் எண்ணெய்:
இந்தியா தனக்குத் தேவையான சூரியகாந்ந்தி எண்ணெய்யை உக்ரைன் நாட்டில் இருந்தே அதிக அளவில் இறக்குமதி செய்கிறது. எனவே இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை உயர வாய்ப்புள்ளது. தற்போது நடைபெற்று வரும் உக்ரைன்-ரஷ்யப் போரால் சமையல் எண்ணெய் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு உலகளாவிய கச்சா எண்ணெய் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது அது சமையல் எண்ணெயின் விலையையும் பாதிக்க உள்ளது.
இருப்பினும், ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் போர் காரணமாக ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் ஏற்படும் பாதிப்பை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
கோதுமை:
இந்தியா கடந்த ஆண்டில் வரலாறு காணாத பணவீக்கத்தை கண்டுள்ளது, பொருட்களின் விலையும் கடந்த இரண்டு ஆண்டுகளாக உச்சம் தொட்டுள்ளது. HUL முதல் பிரிட்டானியா, ITC மற்றும் நெஸ்லே வரை, பெரும்பாலான FMCG மேஜர்கள் அக்டோபர்-டிசம்பர் (Q3) முடிவுகளின் போது பணவீக்கத்தை பெரும் கவலையாக குறிப்பிட்டிருந்தனர், தற்போது ரஷ்யா – உக்ரைன் போரால் சமையல் எண்ணெய்கள், கோதுமை, பாமாயில், பார்லி போன்றவற்றின் விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், உக்ரைனும் ரஷ்யாவும் கோதுமை உற்பத்தி உள்ளிட்ட கமாடிட்டி வர்த்தகத்தில் பெரும் பங்கு வகிக்கின்றன.
அமுல் பால் விலை உயர்வு:
பால் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான அமுல், பால் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இந்த விலை மார்ச் 3 முதல் அமலுக்கு வருகிறது. லிட்டருக்கு 2 ரூபாய் அதிகரிப்பு என்பது MRPயின் படி பால் பாக்கெட்டின் விலை 4 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளது. அமுல் நிறுவனம் கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் பால் விலையை உயர்த்தியிருந்தது. 2021 ஜூலை மாதத்தில் பால் விலை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் 2 ரூபாய் உயர்ந்தப்பட்டுள்ளது.
LPG வணிக சிலிண்டர்:
இன்று முதல் டெல்லியில் 19 கிலோ எடை கொண்ட வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டர்களின் விலை ரூ.105 உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் டெல்லியில் 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ.2,012 ஆக உள்ளது. 5 கிலோ சிலிண்டரின் விலையும் 27 ரூபாய் அதிகரிக்கப்படுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் உள்நாட்டு எல்பிஜி சிலிண்டர்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்து வந்த நிலையில், கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 102 டாலர்களை தாண்டியுள்ளது சிலிண்டர் விலை உயர காரணமாக அமைந்துள்ளது.